முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வேட்புமனுவில் குளறுபடிகள் இருப்பதாக கூறி தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், வேட்பாளர் கட்டாயமாக வெளியிட வேண்டிய சொத்து விவரங்களின் வரம்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய விளக்கத்தை வழங்கியுள்ளது. அறக்கட்டளை சொத்துகளும் தனிப்பட்ட சொத்துகளும் சட்டரீதியாக ஒன்றல்ல என்பதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன், சட்டப்படி மாற்று வழிகளை நாடுவதற்கான வாய்ப்பையும் திறந்துவைத்துள்ளது.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கு , மனுதாரர் வழக்கை திரும்பப்பெற்றதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சட்டப்படி பிற நிவாரணங்களை நாட மனுதாரருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
என்ன குற்றச்சாட்டு?
தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளரான சிவஞானசம்பந்தம் தாக்கல் செய்த மனுவில், மு.க. ஸ்டாலின் தனது வேட்புமனுவில் திமுக அறக்கட்டளையின் நிர்வாகியாக இருப்பதையும், அந்த அறக்கட்டளை செங்கல்பட்டு அருகே ரூ.2.27 கோடி மதிப்பிலான நிலத்தை வாங்கிய விவரத்தையும் குறிப்பிடவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இந்த தகவல்கள் மறைக்கப்பட்டதால், தேர்தல் விதிமீறல் நடந்துள்ளதாகக் கூறி, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அறக்கட்டளையின் சொத்து விவரங்களை வேட்புமனுவில் மறைத்தது முக்கியமான குற்றச்சாட்டு என்பதால், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் தரப்பு, இதுபோன்ற புகார்களுக்கு தேர்தல் ஆணையத்திடம் நேரடியாக விசாரணை கோர முடியாது என்றும், சட்டப்படி சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் தாக்கல் செய்வதே உரிய நடைமுறை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
உயர்நீதிமன்றத்தின் முக்கிய கருத்து
இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வேட்புமனுவில் வேட்பாளரின் தனிப்பட்ட சொத்து விவரங்களையே குறிப்பிட வேண்டும் என்றும், அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகள் தனிப்பட்ட சொத்துகளாக கருதப்பட முடியாது என்றும் தெரிவித்தனர். மேலும், அந்த அறக்கட்டளைசொத்துகளுக்கும் வேட்பாளரின் தனிப்பட்ட உரிமைக்கும் நேரடி தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் மனுதாரர் தரப்பில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால், இந்த வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
திமுக கூட்டணியில் குழப்பமா_நடப்பது என்ன_
வழக்கு தள்ளுபடி; சட்டப்படி நிவாரணம் நாட அனுமதி
நீதிமன்றத்தின் கருத்துகளைத் தொடர்ந்து, மனுதாரர் வழக்கை திரும்பப்பெற விருப்பம் தெரிவித்தார். இதனை பதிவு செய்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதேசமயம், இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்படி பிற உரிய வழிமுறைகளின் மூலம்நிவாரணம் தேட மனுதாரருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், கொளத்தூர் தொகுதி வேட்புமனு தொடர்பாக தொடரப்பட்ட இந்த தேர்தல் வழக்கு தற்போதைக்கு முடிவுக்கு வந்தாலும், சட்ட ரீதியான பிற நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் வாய்ப்பை திறந்துவைத்துள்ளது.
Source link
