சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்த நிலையில், கட்சியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டார் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் . இதற்காக குழு ஒன்றை அமைத்து, மறுசீரமைப்பு குழுவில் நிர்வாகிகளையும் நியமித்தார். அவர்கள் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். இந்நிலையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம் திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இதனையடுத்து திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. இதனிடையில் தேர்தல் தோல்விகள் குறித்து ஆராய்வதற்கும், கட்சியில் மாற்றங்கள் கொண்டு வருவது தொடர்பாகவும் குழு ஒன்றினை அமைத்தார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
இதனை தொடர்ந்து அந்த குழு தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்த நிலையில், இது தொடர்பான அறிக்கைகளை மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர். அதே போல் திமுக ஆதரவாளர்களுடன் கருத்துக்களை கேட்பதற்கு பிரத்யேகமாக செயலி ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றிருந்த நிலையில், அவர் சென்னை திரும்பியதும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் துவங்கும் என கூறப்பட்டது.
அதோடு திமுகவில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து மு.க. ஸ்டாலின் புதிய முடிவு ஒன்றினை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இப்போதைக்கு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட வேண்டாம் என தெரிவித்து இருக்கிறாராம். முதலில் எதிர்க்கட்சி அரசியலை தீவிரப்படுத்தி, தவெகவை பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வேலைகளை மேற்கொள்வோம்.
மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கட்சியினரிடம் கூறி விட்டாராம் மு.க. ஸ்டாலின். இதனையடுத்து இடைத்தேர்தல் முடியும் வரை திமுகவில் எந்த மாற்றமும் வர வாய்ப்பில்லை என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் திமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான பணிகளை தீவிரப்படுத்தினார் மு.க. ஸ்டாலின்.
அதன் அடிப்படையில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மறுசீரமைப்பு நடவடிக்கை தற்போதைக்கு வேண்டாமென மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளது திமுகவினரை கடுமையாக ஏமாற்றம் அடைய செய்துள்ளது. அதே நேரம் தற்போதைக்கு இடைத்தேர்தல் சம்பந்தமான பணிகளில் திமுக கவனம் செலுத்த ஆரம்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் முதல்வர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகள் காலியானதாக உள்ளது. இங்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து திமுக, தவெக மற்றும் அதிமுக கட்சிகள் இடைத்தேர்தலுக்காக மும்முரமாக தயாராகி வருகின்றன. இதனால் காலியாகவுள்ள 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
