மேற்கிந்தியத் தீவுகளுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில், கடைசி நேரத்தில் அதிரடி கம்பேக்கை கொடுத்த மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றியைப் பெற்ற நிலையில், பாகிஸ்தான் அணியின் இரண்டு பௌலர்களுக்கு, ஐசிசி தண்டனை வழங்கியுள்ளது.
என்ன காரணம்? பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அப்பாஸ் மற்றும் குர்ரம் ஷாஷாத்திற்குதான் ஐசிசி தண்டனை வழங்கியுள்ளது. இருவருக்கும், ஐசிசி தண்டனை சட்டம், 2.5 ஆர்டிகல் படி, தண்டனை வழங்கப்படுள்ளது. அதாவது, எதிரணி வீரருக்கு எதிராக கடும் சொற்களை பயன்படுத்துவது, எதிரணி வீரர்களுக்கு எதிராக ஆக்ரோஷமான செய்கை செய்வது, விக்கெட்டை எடுத்ததும் ஆக்ரோஷமாக கொண்டாடுவது போன்ற விஷயங்களுக்குதான் இந்த தண்டனை வழங்கப்படும்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டர் ஷாய் ஹோப் விக்கெட்டை எடுத்ததும், குர்ரம் ஷாஷாத், ஹோப்பிற்கு மிக அருகில் சென்று ஆக்ரோஷமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால், ஷாஷாத்திற்கு, போட்டியின் கட்டணத்தில் 15 சதவீதம் அபாரதமாகவும், ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
முகமது அப்பாஸும், விக்கெட்டை எடுத்தப் பிறகு, பேட்டர் முன்னால் மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இவருக்கு, ஒரு டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டுள்ளது. போட்டியின் மூன்றாவது நடுவர் கொடுத்த புகார் காரணமாக, ஐசிசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இப்போட்டியில், பாகிஸ்தான் அணி சார்பாக, அந்த அணிக் கேப்டன் பாபர் அசாம் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடினார். குறிப்பாக, கடைசி விக்கெட் பேட்டர் முகமது அப்பாஸுடன் இணைந்து, தீவிரமாக போராடி, 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அசாமும் 58 ரன்களை எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இருப்பினும், மேற்கிந்தியத் தீவுகள் அணி அபாரமாக செயல்பட்டு, அப்பாஸ் விக்கெட்டை எடுத்து, 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் எற்றது.
இப்போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானுக்கு 211 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்த நிலையில், முதல் 9 விக்கெட்களை இழந்தபோது, 71 ரன்களைதான் எடுத்திருந்தது. பாகிஸ்தான் அணி, ஒரு கட்டத்தில் 88/9 என இருந்தபோது, பாபர் அசாம் 81 பந்தில் 50 ரன்களை அடித்து களத்தில் இருந்தார். மற்ற 8 பேட்டர்களும் சேர்ந்து, 38 ரன்களைதான் அடித்திருந்தனர். எந்த பேட்டரும், பாபர் அசாமுக்கு சரியான பார்ட்னர்ஷிப் கொடுக்கவில்லை.
கடைசி நேரத்தில், முகமது அப்பாஸ், பாபர் அசாம் ஜோடி, 11ஆவது விக்கெட்டிற்கு 12 ஓவர்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக செயல்பட்டிருந்தனர். இருப்பினும், வெற்றியைப் பெற முடியவில்லை. 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தனர்.
தோல்வியை சந்தித்தப் பிறகு பேசிய பாகிஸ்தான் அணிக் கேப்டன் பாபர் அசாம், ‘‘கடந்த சில நாட்களாக சிறந்த கிரிக்கெட்டை ஆடினோம். ஆனால், கடைசி நாளில் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை. குறிப்பாக, பேட்டர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து சொதப்பியதால்தான், தோல்வியை சந்தித்துள்ளோம். பிட்ச், பௌலர்களுக்கு சாதகமாக இருக்கும் எனத் தெளிவாக தெரிந்தது. இதனால், பேட்டர்கள் அதற்கு ஏற்ப தயாராகி விளையாடியிருக்க வேண்டும். அதனை செய்யாததால்தான் தற்போது தோல்வியை சந்தித்துள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.
