புதுச்சேரி,
தமிழகம், புதுச்சேரியில் த.வெ.க. தனித்து போட்டியிடுகிறது என அந்த கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறார்.
எனவே புதுவையில் 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய கட்டாயம் த.வெ.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகளில் சீட் இடம் கிடைக்காதவர்கள் மாற்று கட்சிகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.
பிற கட்சிகளில் இருந்து ஓரம் கட்டப்படுபவர்களை மற்ற கட்சியில் உள்ளவர்கள் அழைப்பு விடுத்து அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடமும் வழங்குகின்றனர்.
த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் புதுவையை சேர்ந்தவர் என்பதால் செல்போன் மூலம் ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிகிறது.
ஏற்கனவே பா.ஜனதா கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன், அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறிய முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெரியசாமி, அசனா, காங்கிரசில் முன்னாள் எம்.எல்.ஏ. தனவேலு ஆகியோர் த.வெ.க.வில் தஞ்சம் அடைந்துள்ளனர். இன்னும் பலர் த.வெ.க.வில் சேர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
