விசிக கேட்கும் பொதுத் தொகுதிகள்… 12 இல்ல, 8 தான்- திருமாவிற்கு இறங்கி வருமா திமுக? – thirumavalavan demands extra seat common constituencies with dmk 2026 assembly election

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூடுதல் இடங்கள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதிகப்படியான கட்சிகள் கூட்டணியில் இருப்பதை சுட்டிக் காட்டி திமுக தலைமை கறார் காட்டி வருகிறது.

VCK Thirumavalavan Seat Sharing(புகைப்படங்கள்Samayam Tamil)
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் இரண்டு இலக்க எண்ணிக்கையில் சீட் எதிர்பார்க்கும் திருமாவளவன், திமுக கொடுக்கும் அழுத்தத்தால் ஏமாற்றத்தில் இருக்கிறார். அதாவது, தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ஏனெனில் கூடுதல் கட்சிகளை மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வந்திருப்பதால் சீட் ஒதுக்கீடு நெருக்கடியாக மாறியிருப்பதை சுட்டிக் காட்டுகின்றனர்.

விசிகவின் சித்தாந்த அரசியல்

ஆனால் பாஜக எதிர்ப்பில் மிகவும் உறுதியாக இருக்கும் விசிகவிற்கான முக்கியத்துவத்தை ஏன் குறைக்க வேண்டும் என்பது பலரது கேள்வியாக இருக்கிறது. சித்தாந்த ரீதியில் திமுக உடன் இணக்கமாக கைகோர்த்து நிற்கும் விசிக, இதுவரை ஒருமுறை பாஜக உடன் கூட்டணி வைத்ததில்லை. சனாதன எதிர்ப்பில் மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்ட களத்தில் முன்னிலையில் இருக்கக் கூடியவர்கள். அதுமட்டுமின்றி நீண்ட காலமாக அரசியல் களத்தில் தொடரும் விசிகவில் பலர் எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்ற கனவில் இருக்கின்றனர். எனவே திமுக அறிவுறுத்தும் சீட் குறைப்பு என்பது விசிகவினரின் கனவை கலைக்கும் செயல் என்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது.

_ திமுகவால் விசிக பெயர் கெட்டுப்போச்சு_- sangatamizhan vck

திருமாவளவன் வேதனை – கூடுதல் சீட் டிமாண்ட்

அதிலும் தெளிவாக சித்தாந்த பின்னணியில் இல்லாத, தேர்தல் நேரத்தில் மட்டும் சாதக முடிவுகளை நோக்கி காய் நகர்த்தும் தேமுதிகவிற்கு கூடுதல் சீட்களை ஒதுக்கியிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதுவும் விசிகவும் காயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவை அனைத்தையும் சேர்த்து தான், அக்கட்சி தலைவர் திருமாவளவன் தனது புலம்பலை வீடியோ வடிவில் நேற்றைய தினம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். முதலில் 12 தொகுதிகள் வரை கேட்ட விசிக, தற்போது 8 தொகுதிகளுக்கு இறங்கி வந்துள்ளனர். ஆனாலும் திமுக தரப்பு இதுவரை இறுதி செய்யவில்லை.

பொதுத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம்

7 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவும் விசிகவின் சொந்த சின்னமான பானை சின்னத்திலேயே நிற்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். 2021 சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் 4 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் அடங்கும். இதையடுத்து 2 தனித் தொகுதி, 2 பொதுத் தொகுதி என நான்கு இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். வெற்றி பெற்றவர்கள் யார், யார் என்று எடுத்துப் பார்த்தால் திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி, நாகை ஆளூர் ஷாநவாஸ், காட்டுமன்னார்கோவில் (தனி) சிந்தனைச் செல்வன், செய்யூர் (தனி) எம்.பாபு ஆகியோர் ஆவர்.

திமுக கூட்டணியில் நீடிக்கும் அழுத்தம்

2026 சட்டமன்றத் தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட 6 தொகுதிகள் உடன் மேலும் 4 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், புவனகிரி, கரூர் ஆகியவை என்பது கவனிக்கத்தக்கது. திமுகவை பொறுத்தவரை தனிச் சின்னத்தை தாண்டி உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட முன்வர வேண்டும் என்று சிறிய கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் விசிக இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ளது. எனவே எங்களின் தனிச் சின்னத்திலேயே போட்டியிடுகிறோம் என்று தெளிவாக கூறிவிட்டனர்.

விசிகவிற்கு எத்தனை தொகுதிகள்

தலித்கள் மட்டுமின்றி பொதுச் சமூகத் தளத்திலும் நம்பிக்கையை பெறுவதற்கு திருமாவளவன் முயற்சித்து வருகிறார். அந்த வகையில் இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும். அதுவும் பொதுத் தொகுதிகள் வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அந்த வகையில் மேற்சொன்ன லிஸ்டில் இடம்பெற்ற திருவள்ளூர், புவனகிரி ஆகிய தொகுதிகள் பொதுத் தொகுதிகள் ஆகும். தலித்கள் மத்தியில் மட்டுமின்றி பொதுச் சமூகத்தின் நம்பிக்கையை பெற வேண்டும் என்ற திருமாவளவனின் முயற்சி எந்த அளவிற்கு வெற்றி பெறப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். விசிகவிற்கு 7 தொகுதிகளா, இல்லை 8 தொகுதிகளா என்பது இன்னும் இரண்டு நாட்களில் இறுதி செய்யப்படவுள்ளது.