புவனேஸ்வர்,
ஒடிசாவில் சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில், எதிர்க்கட்சியான பிஜு ஜனதாதளத்தை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்தனர். எனவே கட்சி மாறி வாக்களித்த அவர்களிடம் விளக்கம் கேட்டு கட்சித் தலைமையினர் நோட்டீஸ் அனுப்பினர்.அதன்படி, அந்த 6 பேரும் நேற்று முன்தினம் விளக்கம் அளித்தனர். ஆனால் அந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று சட்டசபை கொறடா தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் தலைமையில் கட்சியின் அரசியல் ஆய்வுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 6 எம்.எல்.ஏ.க்களையும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அவர்களை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து நவீன் பட்நாயக் நடவடிக்கை எடுத்துள்ளார்.
