2 கோடி பார்வைகளை கடந்த “மீசையை முறுக்கு 2” படத்தின் “ஆரா 10/10” பாடல்

தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ‘ஹிப் ஹாப்’ ஆதி. திரைத் துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவர் இசையமைத்த, ‘டக்கர்’ பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ‘செர்டிபைடு செல்ப் மேட்’ என்ற புதிய ஆல்பம் பாடல் ஒன்றை எழுதி, பாடி, இசையமைத்துள்ளார். இவரின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தனி ஒருவன், ஆம்பள, அரண்மனை உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார்.மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார். ‘கடைசி உலகப் போர்’ எனும் படத்தை தானே தயாரித்து, இயக்கி, நடித்து, இசை அமைத்திருந்தார்.

இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி, தனது முதல் படமான ‘மீசைய முறுக்கு’ மூலம் கதாநாயகன், இயக்குநர் என இரு வேடங்களிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு சுந்தர் சி தயாரிப்பில் வெளியானது. இப்படத்தில் ஆத்மிகா, விவேக், ஆர்ஜே விக்னேஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாக சொல்லிய அந்த படம் இளைஞர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ‘மீசைய முறுக்கு’ படத்தின் இரண்டாம் பாகத்தை ஆதி இயக்கி நடித்துள்ளார். சுந்தர் சி – குஷ்பு தயாரித்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் என 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன், ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் முதல் பாடலான ‘ஆரா 10/10’ ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று 2 கோடி பார்வைகள் வரை பெற்று அசத்தியுள்ளது. இப்பாடலை ஹிப்ஹாப் ஆதி எழுதி பாடியுள்ளார்.

Source link