கொழும்பு
மேற்காசியாவில் பதற்ற நிலை நீடித்து வரும் சூழலில், இலங்கையில் எரிபொருள் விலை 25 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.398 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கு முன்பு அது ரூ.317 ஆக இருந்தது. இலங்கையில் பொது போக்குவரத்திற்கு பரவலாக பயன்படுத்தப்படும் டீசல் விலையும் ரூ.382 என்பதில் இருந்து ரூ.79 உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் 8 சதவீதம் அளவுக்கு விலை உயர்வு அதிகரித்து இருந்தது. இந்நிலையில், 2 வாரங்களில் 2-வது முறையாக விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அந்நாடு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களுக்கு சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென்கொரியாவை பெருமளவில் சார்ந்துள்ளது.
இலங்கையில், ஈரானால் கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஆலைக்கு தேவையான கச்சா எண்ணெய்யை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. தற்போது, காணப்படும் பதற்ற சூழலால் அதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
அந்நாடு ஏற்கனவே பொருளாதார சவால்களால் பாதிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து கட்டண உயர்வுக்கான நெருக்கடி, ஒட்டுமொத்த பணவீக்கம், வர்த்தகம் மற்றும் வீட்டுக்கு வேண்டிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றையும் சந்திக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இலங்கை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
