தூத்துக்குடி,
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர்.2020-ல் கொரோனோ ஊரடங்கின்போது கடையை அடைப்பது தொடர்பாக தந்தை, மகன்-போலீஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகனை போலீசார் கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இருவரும் நீதிமன்றக் காவலில் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 2020 ஜூன் 22-ல் மகன் பென்னிக்ஸும் அடுத்த நாள் தந்தை ஜெயராஜும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். போலீஸ் கஸ்டடியில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீதர். உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட போலீசாருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீசார் வழக்கு விசாரணைக்கு மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.
இதற்கிடையே, வழக்கில் தன்னை அப்ரூவராக மாற அனுமதிக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையை தாமதம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீதர் மனு தாக்கல் செய்து இருப்பதாக சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய பால்துரை 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தது. சம்பவம் நடந்தபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீசார் ரேவதி, பியூலா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய சாட்சிகளாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டு, விரிவான விசாரணை நடத்தப்பட்டது. நாட்டை உலுக்கிய இரட்டை கொலை வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
