‘தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்’ – எடப்பாடி பழனிசாமி

சென்னை,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல் ) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. அதேபோல், வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னை வந்துள்ளார். தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி பியூஷ் கோயல், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி(என்.டி.ஏ.) கட்சிகளின் தலைவர்கள் இன்று வருகை தந்தனர்.

இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள 3 முக்கிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி பா.ஜ.க. 27 தொகுதிகளிலும், பா.ம.க. 18 தொகுதிகளிலும், அ.ம.மு.க. 11 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள் தொடர்பான விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை தொகுதிகள் என்று வரையறுக்கப்பட்டு, அதன்படி இன்று அறிவிப்பை வெளியிடுகிறோம்.

இதில் பா.ஜ.கவுக்கு 27 இடங்களும், பா.ம.க.வுக்கு 18 தொகுதிகளும், அ.ம.மு.க.வுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இன்று இரவுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள், வேண்டுமென்றே திட்டமிட்டு எங்கள் கூட்டணி பற்றி விமர்சிக்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி உணர்வுப்பூர்வமாக அமைக்கப்பட்ட கூட்டணி. இது வெற்றி கூட்டணி. சட்டமன்ற தேர்தலில் 210 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

எங்கள் கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் டெல்லி செல்வது குறித்து திட்டமிட்டு சிலர் அவதூறு பரப்புகின்றனர். எங்களுக்குள் கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்காகவே டெல்லி செல்கிறோம். அங்கு கூட்டணி விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறோம். ஆனால் நாங்கள் டெல்லி சென்றாலே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார்.

இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் எல்லாம் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வருகை தந்தார்கள். நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். மற்ற கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பதை விரைவில் அறிவிப்போம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link