27 தொகுதிகளை வளைத்துப் போட்ட பாஜக… பின்னணியில் இருக்கும் மெகா ரகசியம் என்ன? – bjp locks down 27 constituencies what is the mega secret behind it

அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இடம்பெற்று உள்ள கட்சிகளில் தொகுதி பங்கீடு வெளியாகி உள்ளது.

BJP 27 seats ADMK alliance(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அண்மையில் வெளியானது. இதையடுத்து, கூட்டணியை இறுதி செய்தும் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும் வேலையை கட்சிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுகவில் அங்கமாக உள்ள மூன்று கட்சிகளின் தொகுகி பங்கீடு விவரம் வெளியாகி உள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் தந்த வெற்றி

பாஜக 27 இடங்களை மல்லுக்கட்டி வாங்கியதற்கு மிக முக்கியக் காரணம் 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் தான் என்று அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட போதே பாஜக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் சுமார் 11% வாக்குகளைப் பெற்றது. இந்த வாக்கு வங்கி அதிமுகவிற்குத் தேவை என்பதை உணர்ந்தே, தமிழக பாஜக தரப்பு கூடுதல் இடங்களைக் கேட்டுப் பெற்றுள்ளது.

அண்ணாமலை ஃபேக்டர் மற்றும் களப்பணி

கடந்த 5 ஆண்டுகளில் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் மற்றும் ஆக்ரோஷமான அரசியல் அணுகுமுறை பாஜகவைத் தமிழகத்தின் மூன்றாவது பெரிய சக்தியாக பிம்பப்படுத்தி உள்ளது. அடிமட்டத் தொண்டர்கள் முதல் கிராமங்கள் வரை எல்லா இடங்களிலும் கட்சி வளர்ச்சி அடைந்து உள்ளது. இதையடுத்து அந்த 20 இடங்கள் பழைய கணக்கு என்றும், புதிய கணக்கு 27 என ஆணித்தரமாக அதிமுகவிடம் பாஜக கணக்கு போட்டு காட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுகவின் கட்டாயம்

எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) இந்தத் தேர்தல் ஒரு வாழ்வா?-சாவா? போராட்டம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால், இதுவரை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், திமுகவின் திராவிட மாடல் மற்றும் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வாக்குகளைப் பிரிக்கும் சூழலில், எதிர்ப்பு வாக்குகளைச் சிதறவிடாமல் இருக்க பாஜகவின் 11% வாக்குகள் அவருக்குத் தேவைப்பட்டது என்றே கூறலாம். எனவே, பாஜகவின் 27 இடங்கள் கோரிக்கையை அவர் ஏற்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார் என்பது தெரிகிறது.

கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் பிடி

கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மற்றும் நெல்லை போன்ற பகுதிகளில் பாஜகவின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்து உள்ளது. இந்த மண்டலங்களில் பாஜக வலுவாக நின்றால் மட்டுமே திமுகவைத் தோற்கடிக்க முடியும் என்ற யதார்த்தத்தை அதிமுக உணர்ந்து உள்ளது. இதனாலேயே அந்தப் பகுதிகளில் கூடுதல் இடங்கள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லி தலைமையின் மிஷன் 2026

தமிழகச் சட்டமன்றத்திற்குள் பாஜகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை இரட்டை இலக்கத்திற்குக் கொண்டு செல்வதில் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் உறுதியாக உள்ளனர். பாஜகவின் தொகுதி பங்கீடு விவகாரத்தில் இவர்களின் தலையீடும் அதிகமாகவே இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவி வரும் நிலையில், வெற்றி யாருக்கு என்ற கருத்து பெரும் விவாதமாகவே உள்ளது.