பேச்சுவார்த்தையும், ராஜதந்திரமுமே ஈரான் போருக்கான முடிவாக இருக்கும் – பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமர்வு நடந்து வருகிறது. இதில் பிரதமர் மோடி மேற்காசிய மோதல் பற்றி குறிப்பிட்டு இன்று பேசினார். அவர் பேசும்போது, தொடக்கத்தில் இருந்து இந்த மோதல் தொடர்பாக நாம் ஆழ்ந்த கவலை தெரிவித்து வருகிறோம். அதன் தீவிர தன்மையை கவனத்தில் கொண்டே இதனை நாடாளுமன்றத்தில் பேச முடிவு செய்தேன் என்றார்.

தொடர்ந்து அவர், மேற்காசியாவில் உள்ள இந்த மோதல் சூழல் கவலையளிக்கிறது. கடந்த 2 முதல் 3 வாரங்களில் ஏற்பட்ட சூழல் பற்றி இந்த அவையில், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி விவரங்களை அளித்துள்ளனர். மேற்காசியாவில் உள்ள தொடர்புடைய தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் நான் பேசியிருக்கிறேன். பதற்றங்களை தணித்து, போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என ஒவ்வொருவரையும் வலியுறுத்தி வருகிறேன்.

Also Read
எந்த பேச்சுவார்த்தையும் இல்லை; கடும் எச்சரிக்கையால் பின்வாங்கிய டிரம்ப்: ஈரான் அரசு ஊடகம்
பேச்சுவார்த்தையும், ராஜதந்திரமுமே ஈரான் போருக்கான முடிவாக இருக்கும் - பிரதமர் மோடி பேச்சு

பொதுமக்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. வர்த்தக கப்பல்களை தாக்குவது, ஹார்மூஸ் ஜலசந்தி போன்ற சர்வதேச நீர்வழிகளை முடக்குவது என்பது ஏற்று கொள்ள முடியாதது என்று கூறினார்.

3 வாரங்களுக்கும் மேலாக, மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த மேற்காசிய மோதலால் உலகளாவிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மக்களின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனாலேயே இந்த மோதலுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்று உலக நாடுகளின் அனைத்து தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது என கூறினார்.

போர் போன்ற சூழலில் கூட, பேச்சுவார்த்தை வழியே தொடர்ந்து இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு இந்திய கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தில் கவனம் செலுத்தி அதனை உறுதி செய்கிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம் என்றார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அனைத்து சாத்தியப்பட்ட உதவிகளையும் இந்திய தூதரகங்கள் வழங்கி வருகின்றன. எனினும் எச்சரிக்கையுடனும், ஒற்றுமையுடனும் இருங்கள் என்றார்.

இந்தியா எப்போதும், நல்லிணக்கம் மற்றும் அமைதிக்காகவே குரலெழுப்பி வருகிறது. பேச்சுவார்த்தையும், ராஜதந்திரமுமே ஒரே தீர்வாக இருக்கும் என்று நம்புகிறது. ஈரான் போருக்கான முடிவாகவும் அது இருக்கும். நம்முடைய அனைத்து முயற்சிகளும் பதற்றங்களை தணிக்கும் நோக்கும் கொண்டது. மோதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். மனித வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எதுவும், மனிதாபிமானத்தின் விருப்பம் கிடையாது. விரைவில் அமைதியான தீர்வை அடைய வேண்டும் என்றே அனைத்து தரப்பினரையும் இந்தியா வலியுறுத்தி வருகிறது என்றார்.

Source link