இந்திய புல்லட் ரயில் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: தண்டவாளக் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறியும் வசதி! – innovation of artificial intelligence in indian bullet train a technique to detect track defects in advance

இந்திய புல்லட் ரயில் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு வரும் புதிய வசதியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புல்லட் ரயில்
மும்பை மற்றும் அகமதாபாத் இடையே அமையவுள்ள இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டத்தில், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை மேம்படுத்தும் வகையில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த கண்காணிப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்களில் பொருத்தப்படும் பிரத்யேக சென்சார்கள் மூலம், தண்டவாளங்களில் விரிசல்கள் உருவாவதற்கு முன்பே அங்குள்ள சிறிய குறைபாடுகளைக் கண்டறிந்து, தானாகவே ரயிலின் வேகத்தைக் குறைக்கும் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட உள்ளது.

முன்பே கணித்து எச்சரிக்கை

நிபந்தனை அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பு (Condition-Based Monitoring – CBM) என்று அழைக்கப்படும் இந்தத் தொழில்நுட்பம், தண்டவாளங்களை மட்டுமல்லாமல் ரயிலின் முக்கிய பாகங்களான பேரிங்குகள், கியர்பாக்ஸ்கள், டிராக்ஷன் மோட்டார்கள் மற்றும் கதவுகளின் செயல்பாடுகளை நிகழ்நேரத்தில் (Real-time) கண்காணிக்கும். இதன் மூலம், ஏதேனும் ஒரு பாகத்தில் பழுது ஏற்பட வாய்ப்பிருந்தால், அது நடப்பதற்குப் பல வாரங்களுக்கு முன்பே கணித்து எச்சரிக்கை செய்யும். வழக்கமாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பாகங்களை மாற்றுவதற்குப் பதிலாக, அவற்றின் தேய்மானத்தின் அளவைப் பொறுத்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள இது வழிவகை செய்கிறது.

சர்வதேச கோச் கண்காட்சி

தென் கொரியாவைச் சேர்ந்த ‘குளோபிஸ்’ (Globiz) நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தத் தொழில்நுட்பம், சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை (ICF) மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) இணைந்து நடத்திய சர்வதேச ரயில் கோச் கண்காட்சி 2026-ல் காட்சிப்படுத்தப்பட்டது. ரயிலின் சக்கரங்கள், போகிகள் மற்றும் மின்சார அமைப்புகளில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள், ரயில் இயங்கும்போது ஏற்படும் அதிர்வுகள் மற்றும் இயந்திர நடத்தைகளைத் தொடர்ந்து பதிவு செய்யும். இந்தத் தரவுகள் ரயிலிலேயே உள்ள ஒரு கணினி மூலம் ஆய்வு செய்யப்பட்டு, ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் இருந்தால் உடனடியாகத் தெரிவிக்கப்படும்.

முக்கியப் பங்கு

குறிப்பாக, தண்டவாளக் குறைபாடுகளைக் கண்டறிவதில் இந்த அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. சக்கரங்களில் உள்ள சென்சார்கள் அதிர்வுகளை அளவிடும்போது, ஒரே இடத்தில் பல பெட்டிகளில் ஒரே மாதிரியான அசாதாரண அதிர்வுகள் பதிவானால், அந்தப் பகுதியில் தண்டவாளம் பலவீனமாக இருப்பதைச் சுட்டிக்காட்டும். இக்கட்டான சூழல்களில், இந்தத் தொழில்நுட்பம் ரயிலின் வேகத்தை தானாகவே மணிக்கு 20 கிலோமீட்டர் வரை குறைப்பதோடு, ஓட்டுநருக்கும் பராமரிப்புக் குழுவினருக்கும் உடனடித் தகவல்களை அனுப்பும்.

கண்காணிப்பு அமைப்புகளை வழங்கும் பணி

இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்திற்கான இந்தக் கண்காணிப்பு அமைப்புகளை வழங்கும் பணி வரும் மே மாதம் முதல் தொடங்கும் என்று குளோபிஸ் நிறுவனத்தின் இயக்குநர் வூ சியோங் சீயோ தெரிவித்துள்ளார். மேலும், சென்னை ஐ.சி.எஃப் மற்றும் பல்வேறு மெட்ரோ ரயில் நிறுவனங்களுடனும் இதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விபத்துகளைத் தவிர்த்து உயிர்ச்சேதத்தைத் தடுப்பதோடு, பராமரிப்புச் செலவுகளையும் குறைக்கும் இந்தத் தொழில்நுட்பம், இந்தியாவின் கடினமான வானிலை மற்றும் நிலப்பரப்புச் சூழலுக்கு ஏற்ப பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேகக்கணினி (Cloud) மற்றும் பல்வேறு தொலைத்தொடர்பு வலைப்பின்னல்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் இந்த வசதி, இந்திய ரயில்வே துறையில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும்.