சென்னையில் 41 மெட்ரோ ரயில் நிலையங்கள் இனி ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையங்களாக மாற்றப்பட இருக்கிறது. இது தொடர்பான விரிவான தகவல்களை இங்கே காணலாம்.
41 மெட்ரோ நிலையங்கள்
இந்தத் திட்டத்தின்படி, தேர்வு செய்யப்பட்டுள்ள 41 மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள 500 மீட்டர் சுற்றளவுப் பரப்பு முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்படும். சென்னை சென்ட்ரல், எழும்பூர், கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் ஆலந்தூர் போன்ற மிக முக்கியமான மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நிலையங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையங்களில் தடையற்ற நடைபாதைகள், நிழற்குடைகளுடன் கூடிய நடக்கும் பாதைகள், மேம்பால நீட்டிப்புகள் (Skywalks) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அணுகுமுறை வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் பயணிகள் பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் நிலையங்களுக்கு வந்து செல்ல முடியும்.
இறுதிக்கட்ட இணைப்பு
மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து இறங்கிய பிறகு, தங்களது இலக்கை அடையப் பயணிகள் எதிர்கொள்ளும் ‘இறுதிக்கட்ட இணைப்பு‘ (Last-mile connectivity) சிக்கல்களைத் தீர்ப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இதற்காக, ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்களுக்கெனப் பிரத்யேகமாகப் பயணிகள் ஏறும் மற்றும் இறங்கும் இடங்கள் (Pick-up and Drop-off zones) ஒதுக்கப்படும். மேலும், மாநகரப் பேருந்து நிறுத்தங்கள் மெட்ரோ நிலைய வாசல்களுக்கு மிக அருகிலேயே மாற்றியமைக்கப்படும். இதன் மூலம் ஒரு வாகனத்திலிருந்து மற்றொரு வாகனத்திற்கு மாறுவதற்கான தூரம் பெருமளவு குறைக்கப்படும். வாகன நிறுத்துமிடங்களும் பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் சீரமைக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெரும் சிரமங்கள்
தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து வெளியே வரும் பயணிகள், மாநகரப் பேருந்துகள் அல்லது மின்சார ரயில்களுக்கு மாறுவதில் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாகக் கிண்டி போன்ற பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் முறையற்ற நடைபாதைகள் பயணிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளன. புதிய திட்டத்தில், அண்ணா சாலை, மின்சார ரயில் நிலையம் மற்றும் ரேஸ்கோர்ஸ் சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் ஆகாய நடைபாதைகளை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது, மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய போக்குவரத்து வலைப்பின்னல்
நகர்ப்புற போக்குவரத்து நிபுணர்களின் கருத்துப்படி, மெட்ரோ நிலையங்களைத் தனித்தனி கட்டிடங்களாகப் பார்க்காமல், ஒரு பெரிய போக்குவரத்து வலைப்பின்னலின் அங்கமாகப் பார்ப்பது ஆரோக்கியமான மாற்றமாகும். முதற்கட்ட மெட்ரோ திட்டத்தின் போதே இத்தகைய ஒருங்கிணைப்புத் திட்டமிடப்பட்டிருந்தாலும், பல்வேறு அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் அது தள்ளிப்போனது. தற்போது மேற்கொள்ளப்படவுள்ள இந்த மறுசீரமைப்புப் பணிகள் சென்னையின் போக்குவரத்து முகவரியையே மாற்றியமைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
