சென்னை,
கருப்பையா தயாரிப்பில் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள படம் ‘யூத்’. பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ‘சிறை’ படம் மூலம் பாராட்டுகளை பெற்ற அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூ ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
‘யூத்’ படம் கடந்த 19ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ள இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை ரூ..30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கானா பாடகர் தினேஷ் இப்படத்திற்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “யூத் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆசைப்பட்ட பொண்ணு பேரு மோனிஷா’ என்ற பாடல் என்னுடையது. இந்தப் பாடலை நான் 12 ஆண்டுகளுக்கு முன்பு பாடியதும், அது மிகவும் பிரபலமானதும் ஆகும். ஆனால், எனது அனுமதியின்றி அந்தப் பாடலை படத்தில் பயன்படுத்தியுள்ளனர். இதனால் நான் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
