மும்பை,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனை வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி கடந்த மாதத்துக்கான (பிப்ரவரி) சிறந்த வீரர் விருதுக்கு பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஹிப்சதா பர்ஹான் தேர்வானார்.
சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் 2 சதம் உள்பட 383 ரன் குவித்து சாதனை படைத்த சஹிப்சதா பர்ஹான், வில் ஜாக்ஸ் (இங்கிலாந்து), வான் சால்விக் (அமெரிக்கா) ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதல் முறையாக இந்த விருதை பெற்றுள்ளார்.
இதேபோல் சிறந்த வீராங்கனை விருதை இந்திய பெண்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி தட்டிச் சென்றார். கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 8 விக்கெட் வீழ்த்திய அருந்ததி ரெட்டி இந்திய அணி தொடரை வெல்வதில் (2-1) முக்கிய பங்கு வகித்தார். இந்த சிறப்பான செயல்பாட்டால் அருந்ததி ரெட்டி, இலங்கை தொடக்க ஆட்டக்காரர் ஹர்ஷிதா சமரவிக்ரமா (இலங்கை), பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் பாத்திமா சனா ஆகியோரை ஓரங்கட்டி விருதை தன்வசப்படுத்தினார்.
