இலங்கையில் போர் நிறைவடையவில்லை: வைகோ பரபரப்பு பேட்டி

சென்னை,

இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2013-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், சுதிர் குமார் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ நேரில் ஆஜரானார்.

அப்போது, இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது கட்சியின் நடைபயணத்தில் இருந்ததால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று வைகோ கூறினார். மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக உள்ளார். அதனால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். கோர்ட்டு அறையில் இருந்து வெளியில் வந்த வைகோ, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “இலங்கையில் போர் நிறைவடையவில்லை. அந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதுவரை விடுதலைப்புலிகள் நடத்திய 4 போர்கள் முடிவடைந்தாலும், வரும் தலைமுறையினர் இலங்கையில் தனி ஈழம் மலர்வதற்கான பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கான 5-ம் கட்ட போரை புதிய பரிமாணத்தில் மேற்கொள்வார்கள். இன்றைய வளரும் தலைமுறையினருடன் இணைந்து ஈழம் மலர்வதற்கான நடவடிக்கைகளில் நானும் செயலாற்றுவேன்” என்றார்.

Source link