சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவுக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் திருப்பத்தூர் தொகுதியை அமமுகவுக்கு ஒதுக்குவதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும், அதனை தொடர்ந்து மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கவுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அமமுக, பாமக, தமாக, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது.
அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்
இதனையடுத்து என்டிஏ கூட்டணியில் இடம்பிடித்துள்ள அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சைதாப்பேட்டை, பூந்தமல்லி, ஒட்டப்பிடாரம், சோளிங்கர், நாங்குநேரி, காரைக்குடி, தஞ்சை, மன்னார்குடி, திருச்சி மேற்கு, திருப்பத்தூர், பெரியகுளம் ஆகிய தொகுதிகளில் அமமுக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி
இந்நிலையில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அமமுக ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த தொகுதியை அதிமுகவினருக்கே வழங்க வேண்டுமென பலரும் கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியை அமமுகவுக்கு ஒதுக்குவதை எதிர்த்து அதிமுக தொண்டர் ஒருவர் கட்சி அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.
அதிமுகவினர் எதிர்ப்பு
மேலும் அதிமுகவுக்கு தான் இந்த தொகுதியை ஒதுக்க வேண்டுமென கூறி, முன்னாள் அமைச்சர் வீரமணியை கண்டித்து முழக்கம் எழுப்பியுள்ளார். இதனால் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையில் அமமுவுக்கு திருப்பத்தூர் தொகுதியை ஒதுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் அதிமுகவினர் ஊர்வலமாக சென்றுள்ளனர்.
இபிஎஸ் – டிடிவி தினகரன் மோதல்
கடந்த 2021 சட்டபேரவை தேர்தலில் அமமுக, தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதனையடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அமமுகவை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு பாஜக முயற்சி செய்தது. முன்னதாக இபிஎஸ்ஸை விமர்சித்து டிடிவி தினகரன் பல கருத்துக்களை கூறி இருந்ததால், அதிமுக தலைமையிலான கூட்டணியில் அமமுக இணையுமா என்ற கேள்விகள் எழுந்தது. அதே நேரம் ஓபிஎஸ், சசிகலாவை ஏற்றுக்கொள்ளாத இபிஎஸ், டிடிவி கூட்டணியில் இணைவதற்கு சம்மதம் தெரிவிப்பாரா என்ற குழப்பங்களும் உருவானது.
குக்கர் சின்னத்தில் போட்டி
இதனையடுத்து திடீர் ட்விஸ்ட்டாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைந்தது. இந்நிலையில் அமமுகவுக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18+1 ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
