காந்தி நகர்,
இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்தந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் உள்ளன. தனி நபர் தான் பின்பற்றும் மதத்திற்கு ஏற்றார்போல் சிவில் சட்டங்கள் உள்ளன.
அதேவேளை, அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டங்களை கொண்டுவர மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 2024ம் ஆண்டு முதல் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை மாநில அரசு நியமித்த குழு அறிக்கையாக சமர்ப்பித்தது. இதையடுத்து, குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் நோக்கில் மாநில சட்டசபையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மாநில முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா மீது விவாதம், வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. வாக்கெடுப்பில் மசோதா பெரும்பான்மை பெற்று கவர்னர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் மசோதா சட்டமாக அமலுக்கு வரும். இதன் மூலம் உத்தரகாண்ட்டிற்கு அடுத்தபடியாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய 2வது மாநிலமாக குஜராத் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது சிவில் சட்ட மசோதா நிறைவேறினால் மாநிலத்தில் திருமணம், விவாகரத்து, லிவ் இன் வாழ்க்கை முறை, வாரிசு உரிமை உள்ளிட்டவற்றில் மத அடிப்படையின்றி பொதுவான சிவில் சட்டம் அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
