உதயசூரியன் சின்னம்.. ஏற்புடையதாக இல்லை.. கமலின் முடிவுக்கு மு.க.ஸ்டாலின் ரியாக்‌ஷன்! – mk stalin reaction to kamal decision not to contest mnm in 2026 tamil nadu assembly elections

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி கமல்ஹாசன் முடிவெடுத்து உள்ளார்.

MK Stalin and Kamal
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் திமுக நிபந்தனையின்றி கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேச நன்மைக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைந்தோம். கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். அதன் விளைவாக, மக்கள் நீதி மய்யத்தின் குரல் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஒலித்தது.

ஏற்புடையதாக இல்லை

அன்று முதல் இன்று வரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், கூட்டணி தர்மத்தை பேணி வருகிறோம். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இரண்டு கட்டமாக நடைபெற்றது.
இன்றிருக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை.

டார்ச் என்பது வெறும் சின்னமல்ல

அவர்களது தரப்பில் அதற்கான நியாயம் இருக்கிறது என்பதை நான் முழுமையாகப் புரிந்து கொள்கிறேன். எப்படியாவது தமிழ்நாட்டை கைப்பற்றிவிட வேண்டுமென மதவாத சக்திகள் சகல வழிகளிலும் சூழ்ச்சி செய்துகொண்டிருக்கும் சூழலில் கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பே முதன்மையானது. நியாயமானதும் கூட.
ஆனால், பேட்டரி டார்ச் சின்னத்துடனான மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் பிணைப்பு உணர்வுப்பூர்வமானது. ஏனெனில், பேட்டரி டார்ச் என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம்.

அடையாளமாக இருக்க முடியாது

கடந்த ஒன்பது ஆண்டுகளாக எந்த ஆதாயமும் இன்றி என்னோடு பயணிக்கும் என் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க முடியாது; புறக்கணிக்கவும் மாட்டேன். தமிழ்நாட்டின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, தமிழ் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு நெருக்கடியான சூழலில், எங்கே எங்கள் பங்கு’ என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்க முடியாது.
இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல;பொறுமை. தேர்தல் அரசியலில் யாருமே இப்படி செய்ததில்லையே என்று கேட்பீர்களானால், ஒரு புதிய அரசியல் நாகரீகத்தின் விதை நான் போட்டது என்று பணிவோடு சொல்வேன். முதல்வர் அவர்கள் அன்போடு அளிப்பதை பெருமையோடு மறுப்பதும் அன்பின் வடிவமே.
தங்கள் குடும்பத்துக்காக எத்தனையோ பேர் தன் வீட்டை விட்டு, ஊரை விட்டு, நாட்டை விட்டு எண்ணற்ற தியாகங்களை செய்கிறார்கள். தமிழ்நாடுதான் என் குடும்பம். நான் சீட்டுகளை விட்டுக் கொடுத்திருக்கிறேன்.

திராவிட மாடல் 2.0 தேவை

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு, திராவிட மாடல் 2.0 அரசு அமைவது இன்றைய தேவை. இது வெறும் ஆட்சி மட்டுமல்ல. காந்தி, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நீதிபரிபாலனம்.
ஆகவே 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்கிற முடிவை திறந்த மனதுடன் அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.

மு.க.ஸ்டாலின் ரியாக்‌ஷன்

இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பருமான கமல்ஹாசன், இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார்.
இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். “இது தியாகம் அல்ல, கடமை” என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான்.

மனமார்ந்த நன்றி

அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் அவர்கள் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்!
பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும் என்று தெரிவித்து உள்ளார்.