மேலும் தமிழ் தேசிய அரசியலையும், விவசாயம் சுற்றுப்புறச் சூழல் சார்ந்த கொள்கையும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நாம் தமிழர் கட்சியின் மலைகளின் மாநாடு காடுகளின் மாநாடு மாடுகளின் மாநாடு உள்ளிட்ட நூதன மாநாடு முயற்சிகள் தனி கவனம் பெற்றன.
இந்த நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்றைய தினம் திருத்தணியில் இருந்து தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
முப்பதாம் தேதி வேட்புமனு தாக்கல்
வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழக முழுக்க 5 கோடி 67 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். முன்கூறிய திருச்சி நாம் தமிழர் கட்சி மாநாட்டின் மேடையில் 234 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த சூழலில் தான் வருகிற 30-ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக அந்த கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் அரசியல் புரட்சி நிகழ்த்திட நாம் தமிழர் கட்சி தொடர்ந்து களத்தில் நிற்பதாகவும் மற்ற கட்சிகள் நோட்டுக்கும் சீட்டுக்கும் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டிருக்கும்போது தனித்துவத்தோடு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருக்கிறதாக தெரிவித்திருந்தார்.
மேலும் திருச்சி நகரில் நடைபெற்ற மாநாட்டில் 117 ஆண்கள் மற்றும் 117 பெண்கள் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி 234 வேட்பாளர்களும் எப்படி ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டார்களோ அதைப்போலவே வேட்புமனு தாக்கலையும் 234 வேட்பாளர்களுக்கும் ஒரே நாளில் ஒருமித்து செய்ய வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார், அதனை தொடர்ந்து வருகிற 30-ஆம் தேதி திங்கட்கிழமை 234 வேட்பாளர்களும் தேர்தலில் வேட்பு மனுவை தாக்கல் செய்வார்கள் என அவர் தெரிவித்திருக்கிறார்.
அச்சுறுத்தலாக அமையுமா விஜய் அம்சம்
கடந்த 15 ஆண்டுகளில் கூட்டணி அமைக்காத நாம் தமிழர் கட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எட்டு சதவீத வாக்குகளை பெற்று தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக மாறியிருக்கிறது. ஆனாலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து முன்வைக்கும் எதிர்மறையான கருத்துக்கள் தமிழ் சூழலில் அவருக்கு கலவையான விமர்சனங்களை பெற்று தருகிறது. சமயங்களில் பெரியார் குறித்தும் திராவிட அரசியல் குறித்தும் நாம் தமிழர் எடுக்கும் நிலைப்பாடு சர்ச்சைக்குரியதாக மாறி வருகிறது.
இந்த சூழலில் தான் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கட்சி தொடங்கிய போது முதலில் சீமான் ஆதரிக்கவே செய்தார். ஆனால் விஜய் பெரியாரைத் தனது கொள்கை தலைவராக வெளிக்காட்டிய தொடங்கியதிலிருந்து சீமான் தனது ஆதரவு நிலைப்பாட்டை மாற்றினார். தொடர்ந்து நாம் தமிழர் கட்சி நான்குமுனைப் போட்டியில் ஒரு கட்சியாக உருவெடுத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக அதிகளவிலான இளைஞர்கள் வாக்குகளை அந்த கட்சி பெற்றிருக்கிறது. ஆனால் விஜய் வருகைக்குப் பிறகு இந்த நிலை முற்றிலும் மாறும் என சொல்லப்படுகிறது. விஜய் எல்லா கட்சிகளின் வாக்குகளையும் உடைப்பார் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கக்கூடிய இந்த சூழலில் நாம் தமிழர் கட்சிக்கு விஜயின் அம்சம் மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கலாம் எனவும் சிலர் கணிக்கின்றனர்.
