மேற்கு ஆசியாவில் போர் சூழல்: நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

புதுடெல்லி,

வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. தங்களை தாக்கி வரும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் ஈரான், மறுபுறம் ஹார்முஸ் நீரிணையையும் மூடி வைத்து இருக்கிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எரிசக்தி தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன.

மேற்காசிய போரால் நாட்டில் கியாஸ் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டதாக சொல்லப்பட்டதை அடுத்து பெட்ரோலியத்துறை உயரதிகாரிகள் அதனை தீவிரமாக கண்காணித்து வினியோகத்தை நெறிமுறைப்படுத்தினர். இந்த போரால் உலக நாடுகள் பலவற்றுக்கும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. எரிபொருள் வினியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டால் அது அனைத்து துறைகளிலும் பாதிப்பை விரிவடையச் செய்யும் என்பதால் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் முனைப்பு காட்டுகின்றன.

Also Read
சட்டசபை தேர்தல்: எடப்பாடி பழனிசாமி இன்று முதல் சூறாவளி பிரசார சுற்றுப்பயணம்
மேற்கு ஆசியாவில் போர் சூழல்: நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

இந்தநிலையில் இந்தியாவில் போர் பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு பல்வேறு நிலைகளில் தயாராகி வருகிறது. இதுபற்றிய விரிவான உரையை பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை, அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இதில் இருந்து மீள்வதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலந்து ஆலோசிக்க மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுகிறது.

இதுகுறித்த அழைப்பு நேற்று விடுக்கப்பட்டது. இந்த கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெறும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டத்தில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் 2 பேர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இதில் பங்கேற்கவில்லை. கேரளாவில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதால் தன்னால் கலந்துகொள்ள இயலாது என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனகார்கே பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link