புதுடெல்லி,
சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற பயத்தில் பொதுமக்கள் சிலிண்டர்களை அவசர அவசரமாக முன்பதிவு செய்து வருகின்றனர். கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி வைப்பதும், கருப்புச் சந்தையில் விற்பனை செய்வதும் தடுக்கும் நோக்கத்தில் நாடு முழுவதும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் எடை 10 கிலோவாக குறைக்கப்படும் என்ற செய்தி தீயாக பரவி வந்தது.இதுகுறித்து இது முற்றிலும் வதந்தி என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும், அதை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டரின் எடையை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் வதந்திகள் பரவின.
ஏற்கனவே வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், வீட்டு உபயோக சிலிண்டரின் எடையும் குறைக்கப்படும் என்ற தகவல் பரவியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.இந்த நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா கூறியதாவது:“வீட்டு உபயோக சிலிண்டர் எடை 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாக குறைக்கப்படும் என்ற தகவலில் உண்மையில்லை. இறக்குமதி பாதிப்பால் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், எடையை குறைக்கும் எந்த திட்டமும் இல்லை.
சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் எடை குறைப்பு குறித்து பரவும் தகவல்கள் அனைத்தும் வெறும் யூகங்களே. பொதுமக்கள் இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி கிடைக்க தேவையான இருப்பு உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில் போதிய இருப்பு உள்ளது. 14.2 கிலோ சிலிண்டர் விநியோகம் வழக்கம்போல எந்த எடை குறைப்பும் இன்றி தொடரும்” என்று தெரிவித்தார்.
