ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வந்த நிலையில், 5 நாட்களுக்கு தாக்குதலை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஈரானில் சரியான நபர்களுடன் பேசிவருவதாகவும் டிரம்ப் நேற்று கூறினார். எனினும், இது தொடர்பாக அவர் கூடுதல் தகவல் எதையும் கூறவில்லை.
இதற்கிடையே, ஈரானுடனான போர் நிறுத்தம் தொடர்பாக 15 அம்சத் திட்டத்தை டிரம்ப் முன்மொழிந்ததாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யூரேனியம் செறிவூட்டலில் ஈரான் ஈடுபடக்கூடாது, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை அதில் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், போர் நிறுத்தத்தை ஏற்க பதிலுக்கு ஈரான் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான், அமெரிக்கா இடையிலான போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; எதிர்காலத்தில் ஈரான் மீது எந்த ராணுவ தாக்குதலையும் அமெரிக்கா நடத்தாது என்கிற உறுதி வேண்டும்;இப்போதைய தாக்குதலில் ஈரானில் ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் பாதிப்புகளுக்கு அமெரிக்கா நஷ்டஈடு வழங்க வேண்டும்;ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்டுப்பாடு வேண்டும்;
ஈரான் ஏவுகணைத் திட்டம் குறித்து அமெரிக்கா எந்தப் பேச்சுவார்த்தையும், கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது;வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை மூட வேண்டும்” இதுபோன்ற கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியானதாக தகவல் இல்லை.
