பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி தாலுகா சாலகர் பகுதியை சேர்ந்தவர் அனிஷ்கர் (வயது 21). இவர் பீதர் மாவட்டத்தில் உள்ள பிரிம்ஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறுதி ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். இந்தநி லையில் அனிஷ்கருக்கு ஆன்லைனில் சூதாடும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது.
இதனால் அவர் அடிக்கடி ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி வந்துள்ளார். இந்த சூதாட்டத்தில் சமீபத்தில் அனிஷ்கர் ரூ.80 ஆயிரம் இழந்துள்ளார். இதிலும் திருந்தாத அனிஷ்கர் தனது நண்பர்கள் மற்றும் தெரிந்த நபர்களிடம் இருந்து கடனாக பணம் வாங்கி மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில் கடன் வாங்கிய பணத்தையும் இழந்த அனிஷ்கர் கடனை திரும்ப கொடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.
மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்து உள்ளனர். இதனால் அனிஷ்கர் மனம் உடைந்து காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் அனிஷ்கர் தனது விடுதி அறையில் யாரும் இல்லாதபோது, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் விடுதி அறைக்கு வந்த சக மாணவர்கள் அனிஷ்கர் தூக் கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இதுகுறித்து விடுதி வார்டனுக்கும், பீதர் மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீ சார் அனிஷ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவர் படித்த பிரிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அனிஷ்கரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.80 ஆயிரத்தை இழந்ததாலும், கடன் தொல்லையாலும் அனிஷ்கர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
