கேரளா, அசாம், புதுச்சேரி தேர்தல்:296 தொகுதிகளில் எத்தனை பேர் போட்டி? இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு! – election commission announced 2140 candidates in 296 constituencies states of puducherry kerala and assam

புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை நிறைவடைந்தது.

இந்திய தேர்தல் ஆணையம்(புகைப்படங்கள்Samayam Tamil)
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் உள்ள மொத்தமுள்ள 296 சட்டமன்றத் தொகுதிகளில் 2,140 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2026 சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

26-ஆம் ஆண்டு அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி அறிவித்தது. ஐந்து மாநிலங்களிலும் 1.74 கோடி மக்கள் வாக்களிப்பார்கள் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார். இந்த ஐந்து மாநிலங்களிலும் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். இந்த 5 மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

5 மாநிலங்களில் வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை

1. அஸ்ஸாம் – வாக்குப்பதிவு நாள் – ஏப்ரல் 9; வாக்கு எண்ணிக்கை நாள் – மே 4
2. தமிழ்நாடு – வாக்குப்பதிவு நாள் – 23 ஏப்ரல்; வாக்கு எண்ணிக்கை நாள் – 4 மே
3. மேற்கு வங்கம் – வாக்குப்பதிவு தேதிகள் – ஏப்ரல் 23 (முதல் கட்டம்), ஏப்ரல் 29 (இரண்டாம் கட்டம்); வாக்கு எண்ணிக்கை தேதி – மே 4
4. கேரளா – வாக்குப்பதிவு நாள் – ஏப்ரல் 9, வாக்கு எண்ணிக்கை நாள் – மே 4.
5. புதுச்சேரி – வாக்குப்பதிவு நாள் – 9 ஏப்ரல், வாக்கு எண்ணிக்கை நாள் – 4 மே
அந்த வகையில், புதுச்சேரி, கேரளா, அசாம் உள்ளிட்ட மூன்று மாநில யூனியன் பிரதேசங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வேட்பு மனு மீதான பரிசீலனை நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் , பணிகள் முழுமை அடைந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டமன்ற தொகுதிகளில் 789 வேட்பாளர்களும் ,
கேரளாவில் உள்ள 140 சட்டமன்ற தொகுதிகளில் 985 வேட்பாளர்களும் மற்றும்
புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் 366 வேட்பாளர்களும் களத்தில் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்தம் புதுச்சேரி , கேரளா , அசாம் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 296 சட்டமன்ற தொகுதிகளில் 2,140 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு நாளை மாலை வரை அவகாசம் உள்ள நிலையில், வேட்பு மனுக்களை நாளைய தினம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் வேட்பாளர்கள் யாரேனும் திரும்பப்பெற்றால் இதன் எண்ணிக்கை மாறக்கூடும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் உள்ளிட்ட 3 மாநில யூனியன் பிரதேசங்களுக்கு அடுத்த மாதம் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.