அதிர்ச்சி சம்பவம்: ஆற்றில் கவிழ்ந்த தனியார் சொகுசு பஸ்: 23 பேர் பலியான சோகம் – பலர் மாயம்

டாக்கா,

வங்காளதேச நாட்டின் தென்மேற்கு பகுதியான ராஜ்பாரி அருகே உள்ளது தவுலத்தியா படகு முனையம். பெருக்கெடுத்து ஓடும் பத்மா ஆறு தலைநகர் டாக்காவை தென்மேற்கு பகுதியில் இருந்து பிரிப்பதால் இந்த ஆற்றை கடக்க படகு போக்குவரத்துதான் பிரதானமாகும். மேலும் பஸ்கள் மற்றும் சிறிய ரக வாகனங்கள் கூட படகுகளின் மூலமாகவே ஆற்றைக் கடந்து சென்று மீண்டும் சாலை பயணத்தை தொடர்கின்றன.

அதுபோலவே 40 பயணிகளுடன் வந்த பஸ் ஒன்று நேற்று மாலை படகில் ஏற முயன்றபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட சில பயணிகள் ஆற்றில் நீந்தி கரை சேர்ந்தனர். சிலர் பஸ்சுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் தற்போது வரை 23 பயணிகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

முன்னதாக பஸ்சை மிதவைப் பாலத்தின் வழியாக படகில் ஏற்ற முயன்றபோது, மற்றொரு சிறிய படகு மிதவைப் பாலத்தில் மோதியதால், பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பஸ் விழுந்த இடத்தில் ஆறு 30 அடி ஆழம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மாயமான பயணிகளை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே நேறு இரவு நேரம் என்பதால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், பின்னர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னதாக நேற்று இரவு சுமார் 11:15 மணியளவில், பஸ்சின் ஒரு பகுதி தெரிய ஆரம்பித்தது, மேலும் இரவு 11:30 மணியளவில், கப்பலின் கிரேனைப் பயன்படுத்தி முழுபஸ்சும் மேலே தூக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒருவர், தான் நீந்தி கரைக்கு வந்ததாகவும், ஆனால் பஸ் மூழ்கியபோது தனது மனைவியும் குழந்தையும் தண்ணீருக்குள் மூழ்கியதைப் பார்த்ததாகவும் கதறியபடி கூறியது சோகத்தை ஏற்படுத்தியது.

Source link