மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசு ரூ.165 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது: சித்தராமையா தாக்கு

கர்நாடக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு முதல்-மந்திரி சித்தராமையா பதிலளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் இந்த நிதி ஆண்டின் இறுதியில் மாநிலத்தின் கடன் ரூ.8 லட்சத்து 24 ஆயிரத்து 369 கோடியாக அதிகரிக்கும். நாங்கள் கடன் வாங்கியுள்ளோம். நாங்கள் எவ்வளவு கடன் வாங்கியுள்ளோம், நீங்கள் வாங்கிய கடன் எவ்வளவு என்பதை விவரமாக கூறுகிறேன். இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை (ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு) மத்திய அரசின் கடன் 53.11 லட்சம் கோடியாக இருந்தது.

தற்போது மத்திய அரசின் கடன் ரூ.218 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 12 ஆண்டுகளில் ரூ.165 லட்சம் கோடியை மத்திய அரசு கடன் வாங்கியுள்ளது. இது நமது நாட்டின் கடன் அல்லவா?. நடப்பு ஆண்டு மட்டும் ரூ.16.96 லட்சம் கோடியை மத்திய அரசு கடன் வாங்கியுள்ளது. நாங்கள் இந்த ஆண்டு வாங்கும் கடனின் அளவு ரூ.1.32 லட்சம் கோடி ஆகும்.

15-வது நிதி ஆணையம் கர்நாடகத்துக்கு சிறப்பு நிதியாக ரூ.11 ஆயிரத்து 495 கோடி வழங்குமாறு கூறி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இது கர்நாடகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் இல்லையா?. 4 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பட்ஜெட்டில் பத்ரா மேலணை திட்டத்துக்கு ரூ.5 ஆயிரத்து 300 கோடி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிதியை இதுவரை வழங்கவில்லை. இது கர்நாடகத்துக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா?. இதுகுறித்து நாங்கள் கேட்கக்கூடாதா?. இதை சொன்னால் நீங்கள் எங்களை விமர்சிக்கிறீர்கள். இதுகுறித்து நீங்களும் (பா.ஜனதா) கேள்வி கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link