அண்ணாமலை vs நயினார் நாகேந்திரன்
ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியை பெரிதும் விரும்பிய மோடி – ஷா கூட்டணி, அண்ணாமலையை ஓரங்கட்டி நயினார் நாகேந்திரனை தலைவர் நாற்காலியில் அமர்த்தியது. இதையடுத்து தேசிய அளவில் அண்ணாமலைக்கு பொறுப்பு கொடுக்கப்படும். அவருக்கு போதிய முக்கியத்துவம் அளித்து சரியான முறையில் பயன்படுத்தி கொள்வோம் என்றெல்லாம் அமித் ஷா பேசினார். ஆனால் எதுவுமே அரங்கேறவில்லை. கடைசியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சார களத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.
கோவையில் மிகப்பெரியளவில் பாஜக வளர்கிறதாம்: அண்ணாமலை ஐபிஎஸ் பெருமிதம்!
சிங்காநல்லூர் தொகுதி கிடைக்கவில்லை
மாநிலத் தலைவராக இருந்துவிட்டு சில தொகுதிகளுக்கு மட்டும் பொறுப்பாளரா என்ற அதிருப்தி ஏற்பட்டதாக பேச்சு எழுந்தது. இந்த சூழலில் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி கொள்கிறாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்திருக்கிறது. ஏனெனில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதிக்கு பதிலாக, இம்முறை சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளில் ஒன்றை பெரிதும் எதிர்பார்த்தார். இதற்காக சில களப் பணிகளும் முன்னெடுத்தார். ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட 27ல் இந்த இரண்டு தொகுதிகளும் இடம்பெறவில்லை.
பல்லடம் தொகுதியில் குறைந்த வாக்குகள்
கோவை மாவட்டத்தில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட ஒரே தொகுதி கோவை வடக்கு. இதில் வானதி சீனிவாசன் போட்டியிட ஏற்கனவே பணிகளை தொடங்கிவிட்டார். சென்னையில் ஒதுக்கப்பட்ட ஒரே தொகுதியான மயிலாப்பூரில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடவுள்ளார். இவர் நேற்றைய தினம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். முன்னதாக அண்ணாமலைக்கு பல்லடம் தொகுதியை ஒதுக்க அதிமுக முன்வந்ததாக கூறுகின்றனர். ஆனால் 2024 மக்களவைத் தேர்தலில் இவர் போட்டியிட்ட கோவை தொகுதிக்கு உட்பட்ட பல்லடத்தில் குறைந்த வாக்குகளையே பெற்றிருக்கிறார். எனவே இதை தவிர்த்துவிட்டாராம்.
அப்படியெனில் அண்ணாமலை போட்டியிட சாதகமான தொகுதிகள் எதுவுமே பட்டியலில் இல்லை. இதற்கிடையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று பாஜக மேலிடத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாக தெரிகிறது. தமிழக பாஜகவில் முக்கிய இளைஞர் சக்தியாக பார்க்கப்பட்ட அண்ணாமலை, அடுத்தடுத்து தேர்தல்களில் களமிறங்கி வெற்றி வாய்ப்பிற்காகவும், வாக்கு வங்கியை உயர்த்தவும் காய் நகர்த்துவார் என்று அவரது ஆதரவாளர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
பாஜக மேலிடத்திற்கு பறந்த கடிதம்
தொண்டனாக கட்சி மற்றும் தேர்தல் வேலைகளை செய்ய தயார் என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். இது அவரது தரப்பில் இருந்து வெளிப்படும் அதிருப்தியாக தான் தெரிகிறது. ஏற்கனவே கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்றும், பதவிகள் கிடைக்கவில்லை என்றும் ஏமாற்றத்துடன் வலம் வந்தார். இதனால் அரசியல் களத்தில் பெரிதாக தலை காட்டாமல் தவிர்த்தார். அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் தேர்தல் நேர செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இதுபற்றி பாஜக தரப்பினர் கூறுகையில், போட்டியிடுவது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கைவிரித்தனர். இந்நிலையில் அடுத்த சில நாட்களில் நயினார் நாகேந்திரன் வெளியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அனைத்து குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்கின்றனர்.
