தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுபா நகரைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 35). இவர் அந்த பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வினோதினி(32). இந்தத் தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினோதினி, விபரீத முடிவெடுத்துள்ளார். வீட்டில் இருந்த குளிர்பானத்தில் எலி மருந்தை (Rat Poison) கலந்து, தனது 2 குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டுத் தானும் அதைக் குடித்துள்ளார்.
சிறிது நேரத்தில் 3 பேரும் மயங்கி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக அவர்களை மீட்டுச் சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக தாயே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவில்பட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
