புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் Friendly Fight? பீகாரிலும் இதே தப்பதான் பண்ணாங்க? – dmk congress clash in puducherry seat may affect win chances

புதுச்சேரியில் கூட்டணியில் இருக்கக்கூடிய திமுக -காங்கிரஸ் ஒரே தொகுதியில் எதிரெதிராக போட்டியிடுகிறது. இது வெற்றி வாய்ப்பை சிதைக்கும் என விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Dmk Congress clash(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாடு, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. மிக முக்கியமான தேர்தலாக கவனிக்கப்படும் இது பல்வேறு பரிணாமங்களை எடுத்திருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் தமிழகம் நான்குமுனை போட்டியை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பு நிலவி வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக காங்கிரஸ் கருதப்படுகிறது.

கடந்த பல நாட்களாகவே திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சனைகள் நீடித்து வந்த நிலையில் தற்போது தான் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி தொகுதி பங்கீடுகள் முடிவடைந்து இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணியிலேயே பெறும் பூசல் எழுந்து வருகிறது. புதுச்சேரியில் யூனியன் பிரதேசத்தில் வருகிற ஒன்பதாம் தேதி தேர்தல் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இந்தியா கூட்டணிதான் நீடிக்கிறது. ஆனால் புதுச்சேரியில் ஆறு தொகுதிகளில் திமுக காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும் திமுக கூட்டணிக்கு 14 இடங்களும் முடிவு செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23 -ஆம் தேதி முடிவடைந்து விட்டதால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் 30 தொகுதிகளையும் தனித்தனியாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதன் பின்னர் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரண்டு கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கிய தொகுதிகளை விட்டு மற்ற தொகுதிகளில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்த சூழலில்தான் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஆறு தொகுதிகளை காங்கிரஸ் சார்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் நேரடி போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் சார்பில் பாலன், ஆனந்த் ஆகியோர் நெல்லித்தோப்பு பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் அதே தொகுதியில் திமுகவின் கார்த்திகேயன் போட்டியிடுகிறார்.
ராஜ்மோகன் தொகுதியில் விக்னேஷ் கண்ணன் திமுக சார்பில் போட்டியிடுகிறார். ஆனால் அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் குமரன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதைப்போலவே மங்கலம், திருபுவனம், காலாப்பட்டு உள்ளிட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே எதிரெதி போட்டி நிலவுகிறது.

வேட்புமனுவை வாபஸ் பெற மறுக்கும் காங்கிரஸ்

இது தொடர்பாக கட்சி தலைமை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் தங்களது மனுவை வாபஸ் பெற மறுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பரபரப்பு நீடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் தான் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் அகில இந்திய செய்தி தொடர்பாளர் டோலி ஷர்மா பேசுகையில் இன்றோடு வேட்பு மனு திரும்பப்பெறும் கடைசி நாள் என்பதால், இன்று யாரெல்லாம் வேட்பு மனுவை திரும்ப பெறவில்லையோ அவர்கள் எல்லாம் கூட்டணியில் வேறு கட்சியை சேர்ந்தவர்கள் போட்டியிட்டாலும் “நட்பு ரீதியலாக – freindly fight” போட்டியிடுவார்கள் என கூறியிருக்கிறார், இது மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கூட்டணி அணுகுமுறை வெற்றி வாய்ப்பை சிதைக்கிறது

இந்த சூழலில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடும் என கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருக்கிறார். ஊசுடு,நெட்டப்பாக்கம், உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகளும் கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளாகும். ஆனால் இந்த அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினரும் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இது குறித்து வருத்தம் தெரிவித்த திருமாவளவன் காங்கிரஸ் கட்சியின் இந்த போக்கு தொண்டர்களுக்கு தேவையற்ற மன உளைச்சலை தருவதாகவும் மேலும் இது வெற்றி வாய்ப்பை கேள்விக்குறியாக்குவதாகவும் பேசியிருக்கிறார்.

பீகாரில் தோல்வியிலிருந்து பாடம் கற்காத காங்கிரஸ்

பீகார் சட்டமன்றத்தேர்தல் கடந்து 2025 -ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் பீகாரில் முன்னெப்போதும் இல்லாத அளவு காங்கிரசின் மகாகட்பந்தன் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. அதற்கு காங்கிரசின் கூட்டணி அணுகுமுறைகள்தான் காரணம் என சொல்லப்பட்டது. மேலும் அதே நடைமுறையைத்தான் தற்போது திமுக கூட்டணிலும் காங்கிரஸ் பின்பற்றி வருவதாகவும் பல குற்றச்சாட்டுகள் வருகின்றன.
பீகாரில் 61 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால் சொற்ப இடங்களிலேயே காங்கிரஸ் வென்றது. அதோடு மட்டுமல்லாது ஆர்ஜேடி போட்டியிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. தற்போது செய்வதைப்போல அப்போதும் அது நட்பு ரீதியிலான போட்டி என்று சொல்லப்பட்டது. கூட்டணியுடனான சமரசம் அற்ற செயல்களை வெளிப்படையாகவும் மற்றும் impulsive -ஆகவும் செய்யக்கூடிய காங்கிரசின் போக்கு அவர்களின் தோல்விக்கு வழி வகுத்ததாக சொல்லப்படுகிறது. அதே நடைமுறையே தற்போது பாண்டிச்சேரியிலும் காங்கிரஸ் பின்பற்றுவதாக பல விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.