மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் உரிமையியல் நீதிமன்றம்
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, சென்னை 12-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் இந்த வழக்கினை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு விசாரித்தது. விசாரணையின் போது இரு தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அன்புமணி ராமதாஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகுதான் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாகவும், 2025-28 காலப்பகுதிக்கு அவர் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைச் சிறப்பு நிர்வாகக் குழு எதிர்க்கிறது என்றும் வாதிட்டனர். மேலும், அன்புமணி ராமதாஸ் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்பட்டதாகவும், ஆனால் போலி ஆவணங்களைத் தயாரித்துத் தேர்தல் ஆணையத்தை அவர் ஏமாற்றியுள்ளதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
முற்றிலுமாக மறுத்தனர்
மறுபுறம், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் மற்றும் அன்புமணி ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தனர். டாக்டர் ராமதாஸைச் சிலர் தவறாக வழிநடத்தி வருவதாகவும், இது தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான ஒரு தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். பாமக ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற முறையில், அதன் சின்னம் வேறு யாருக்கும் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே மாம்பழம் சின்னம் கோரப்பட்டதாகத் தெரிவித்தனர். மேலும், 2025 ஆகஸ்ட் மாதம் ராமதாஸ் செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பொதுக்குழுவானது விதிகளின்படி நடத்தப்படவில்லை என்றும், அதற்கான ஆவணங்கள் இல்லை என்றும் அவர்கள் வாதிட்டனர்.
தனிநபர்களுக்கு வழங்கப்படுவது அல்ல
தேர்தல் ஆணையம் தனது தரப்பு விளக்கத்தில், சின்னம் என்பது தனிநபர்களுக்கு வழங்கப்படுவது அல்ல என்றும், அது பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரிலேயே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெளிவுபடுத்தியது. தேர்தல் நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், சின்னத்தை முடக்குவது போன்ற விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த முகவரியிலிருந்து கடிதங்கள் வந்தனவோ, அந்த முகவரிக்கே சின்னம் குறித்த தகவல்கள் அனுப்பப்பட்டதாகவும் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2026 சட்டமன்றத் தேர்தல்
இறுதியில், அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தர்மபிரபு, டாக்டர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தம்மை பாமகவின் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற ராமதாசின் கோரிக்கையையும் நிராகரித்தது. இந்தத் தீர்ப்பு பாமகவின் தேர்தல் வியூகங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. ஒருபுறம் தந்தையும், மறுபுறம் மகனும் சட்ட ரீதியாக மோதிக்கொள்ளும் இந்தச் சூழல், கட்சித் தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பாமகவின் சின்னம் மற்றும் தலைமை குறித்த இந்தச் சட்டப் போராட்டம் தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.
