‘த.வெ.க.வில் ஒன்றரை மணி நேரத்தில் 10,000 விருப்ப மனுக்கள் விநியோகம்’ – சி.டி.ஆர்.நிர்மல்குமார் பேட்டி

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று (பிப். 6) முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்களை பிப்.14 ஆம் தேதி வரை த.வெ.க. தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

த.வெ.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியது. நாளை முதல் காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

முதல் விருப்ப மனுவை கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் சார்பில் கட்சி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த், த.வெ.க. மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் ரூ.100 செலுத்தி தங்களது விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் விருப்ப மனு பெற குவிந்தனர். இந்த நிலையில், த.வெ.க. இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

“த.வெ.க.வில் ஒன்றரை மணி நேரத்தில் 10,000 விருப்ப மனுக்கள் இன்று ஒரே நாளில் கொடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை மனு விநியோகம் செய்யப்படும்.

விருப்ப மனுக்களை பெற வருகிற 14-ந்தேதி வரை அவகாசம் இருக்கிறது. காலை 10 மணி முதல் 6 மணி வரை மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். எனவே, ஒரே நாளில் அனைவரும் வராமல் பொறுமையாக வாங்கிக் கொள்ளலாம்.

விஜய்யின் பெயரில் எவ்வளவு மனு வாங்கப்பட்டுள்ளது என்பது கணக்கிடப்பட்டு வருகிறது. மனுக்களை திரும்ப வழங்கும் நாள் குறித்து ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link