அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் துணை போகக் கூடாது.. மாம்பழச் சின்னம் விவகாரம்.. ராமதாஸ் அறிக்கை! – ramadoss says eci should not side with anbumani on pmk and mango symbol issue

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு நேர்மையான அளவில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டுமே தவிர, ஜனநாயகத்துக்கு விரோதமாக, ஜனநாயகமாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் துணை போகக்கூடாது என்று பாமக ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

PMK Ramadoss
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், சமூக நீதி, இடஒதுக்கீடு, பூரண மதுவிலக்கு மற்றும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றம் ஆகியவைகளை முக்கியக் கொள்கைகளாக உழைக்கும் மக்களை கொண்டு 16.07.1989 அன்று பாட்டாளி மக்கள் கட்சியை என்னை நிறுவனராகக் கொண்டு மிகப்பெரும் மக்கள் ஆதரவோடும், எழுச்சியோடும் என்னால் தொடங்கப்பட்டது.

கட்டி காப்பாற்றிய இயக்கம்

தொடங்கிய நாள் முதல் கடந்த 37 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் ஒவ்வொரு குக்கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை ஓடி ஓடிச் சென்று வீதி தோறும் மக்களை சந்தித்தும், மக்களை திரட்டியும் பல்வேறு தரப்பு மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை நடத்தி, நான் உட்பட கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறைக் கொடுமைகளை அனுபவித்து, இந்த இயக்கத்தை கட்டி காப்பாற்றி வருகிறேன்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் உருவாக்கம்

பாட்டாளிகளும் அரசியல் அதிகாரங்களை பெற வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற, சட்டமன்ற, ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டு பல மத்திய அமைச்சர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், நகர மன்றத் தலைவர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உள்ளாட்சி பிரதிநிதிகளையும் உருவாக்கினேன்.

அபகரிக்கத் திட்டம்

தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத சக்திமிக்க இயக்கமாக பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்தெடுத்தேன். இது பாட்டாளி சமூகத்திற்கு வளர்ச்சியை தந்தது. இந்த நிலையில் என்னால் வளர்க்கப்பட்டவர்கள், என்னை புறந்தள்ளி கட்சியை அபகரிக்கும் நோக்குடன் செயல்பட்டு, போலியான ஆவணங்களை உருவாக்கி, வளர்த்த கட்சியை அபகரிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
அவர்கள் உருவாக்கிய போலியான ஆவணங்களை கொண்டு தேர்தல் ஆணையத்தில் முறைகேடான வழிகளைக் கையாண்டு தங்களின் சுயநலத்திற்காக கட்சியை அபகரிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
என்னால் உருவாக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியையும், அதன் கொடியையும், சின்னத்தையும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக பலமுறை நீதிமன்றங்களில் முறையிட்டும், ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையம் சதிகாரர்களின் சதிச் செயலுக்கு துணை போகும் வகையில் அதன் நடவடிக்கைகள் உள்ளன.

டெல்லி உச்சநீதிமன்றம் கேள்வி

2026 சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற இந்த நேரத்தில் என்னால் உருவாக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னத்தை அவர்களுக்கு வழங்கக்கூடாது என்று டெல்லி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில் “அன்புமணிக்கு எந்த அடிப்படையில் மாம்பழம் சின்னத்தை வழங்கினீர்கள்?” என்று டெல்லி உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பியதுடன், 3 நாட்களில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியது.

ஜனநாயக படுகொலை

ஆனால் தேர்தல் ஆணையமோ பாரபட்சமாக, ஒரு தலைபட்சமாக, கட்சியை அபகரிக்க நினைப்பவர்களுக்கு ஆதரவாக உரிமையியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அங்கீகாரமற்ற கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கு சின்னம் வழங்குவது தொடர்பாக ஜனநாயகமாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பது ஜனநாயக படுகொலையாகும்.

அன்புமணி அதிமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டார், ராமதாஸ் சிக்னல் என்ன_ கூட்டணி யாருடன்_

தேர்தல் ஆணையம் துணை போகக்கூடாது

ஜனநாயகத்திற்கும், நீதிக்கும் எதிரான இந்த செயலை தேர்தல் ஆணையம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் தனது முடிவை திரும்ப பெற வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு நேர்மையான அளவில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டுமே தவிர, ஜனநாயகத்துக்கு விரோதமாக, ஜனநாயகமாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் துணை போகக்கூடாது என்று தெரிவித்து உள்ளார்.