இரட்டை இலை சின்னத்தில் இந்திய ஜனநாயக கட்சி போட்டி?

சென்னை,

தமிழ்நாட்டை அடுத்து ஆளப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. ஆளும் தி.மு.க. இந்த தேர்தலில் ‘மெகா’ கூட்டணி அமைத்து களம் காண்கிறது. அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் பலமிக்கதாகவே உள்ளது.

இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துவிட்டது. அதாவது பா.ஜனதா 27, பா.ம.க. 18, அ.ம.மு.க. 11. த.மா.கா. 5, இந்திய ஜனநாயக கட்சி 2. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் தலா ஒரு இடத்திலும் களம் காண்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு 65 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது போக, 169 தொகுதிகளில் அ.தி.மு.க. களம் காண்கிறது.

இந்த 169 தொகுதிகளின் பெயரையும், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மா.கா., இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது. மற்ற கட்சிகளான புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் எந்த சின்னத்தில் களம் காணலாம் என்பது குறித்து யோசித்து கூறுவதாக தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்லாவரம், குன்னம் தொகுதிகளில் இந்திய ஜனநாயக கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இரு வேட்பாளர்களும் அக்கட்சியின் ஐடி விங் மூலம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கத் தொடங்கிவிட்டனர்.

Source link