‘ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை’ – நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி,

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலுக்கு இடையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அந்த வழியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஈரான் அனுமதி மறுத்து உள்ளது. இதனால் சர்வதேச அளவில் வணிக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில் வணிக சிலிண்டர் விநியோகத்திற்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேலும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை தலா ரூ.10 குறைத்துள்ளது.

இதற்கிடையில், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியாவில் மீண்டும் கொரோனா காலத்தைப் போன்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனை மத்திய அரசு மறுத்துள்ளது.

இது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், “இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக பரவும் வதந்திகள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை. அத்தகைய எந்த ஒரு திட்டமும் இந்திய அரசிடம் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று நிதி மசோதா 2026 மீதான விவாதத்தின்போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், “பல நாடுகள் மோட்டார் எரிபொருள் விலையை 20 முதல் 50 சதவீதம் வரை உயர்த்தியுள்ள நிலையில், இந்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை மாற்றாமல் வைத்துள்ளது.

மேற்கு ஆசியப் போரைத் தொடர்ந்து நாட்டில் பொது ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை. அரசியல்வாதிகள் வதந்திகளைப் பரப்புவதையும், மக்களிடையே அச்ச உணர்வை உருவாக்குவதையும் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Source link