கடந்ததாக 5 தேர்தல்களில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், 2026 சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
தொகுதியை மாற்றிய நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், இந்த முறை சாத்தூர் தொகுதியில் தே.ஜ. கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் தொகுதியை மாற்றி போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாதக, தவெக என தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. இதில் திமுக மற்றும் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்து எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்ற இறுதிகட்டத்தில் இருக்கின்றனர். அதே நேரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் 150 வேட்பாளர்களின் பட்டியல்களும் வெளியாகின. அதில் தான் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவின் மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
2001 முதல் 2026 வரை வரலாறு
குறிப்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், 2001 ஆம் ஆண்டு திருநெல்வேலி தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வி கண்டாலும், 2011 ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிரூபித்தார். பின்னர் 2016 ஆம் ஆண்டு தோல்வி அடைந்த அவர், 2021 ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்று அரசியல் வலிமையை நிலைநிறுத்தி தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.
ஐந்து முறை ஒரே தொகுதியில் போட்டியிட்ட அனுபவம்
இவ்வாறு ஐந்து முறை ஒரே தொகுதியில் போட்டியிட்ட அனுபவம் உள்ள நயினார் நாகேந்திரன், தற்போது தொகுதி மாற்ற முடிவு எடுத்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சாத்தூர் தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாக கூறப்படுவது, அங்கு கட்சியின் வாக்கு வங்கி மற்றும் அரசியல் சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான தீர்மானமாக பார்க்கப்படுகிறது.
நயினார் நாகேந்திரன் அழுத்தம், இருவரும் மகிழ்ச்சி… டெல்லியில் திருப்புமுனை?
2026 தேர்தலில் முக்கிய திருப்பு முனையாக அமையும்
இந்த மாற்றம், அந்தப் பகுதியின் தேர்தல் கணக்கீடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது அரசியல் ஆய்வாளர்களிடையே கேள்வியாக உள்ளது. மேலும், அவரின் அனுபவமும் ஆதரவாளர்களின் வலிமையும் சாத்தூர் தொகுதியில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது. மொத்தத்தில், நயினார் நாகேந்திரன் எடுத்துள்ள இந்த புதிய அரசியல் முடிவு, 2026 தேர்தலில் முக்கிய திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
