லாஸ் ஏஞ்சல்ஸ்,
சினிமா உலகில் தலைசிறந்த விருதாக ‘ஆஸ்கர் விருது’ கருதப்படுகிறது. இந்த விருதினை பெறுவது உலகெங்கும் திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கி, ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் ஹாலிவுட் பொலேவார்ட் நகரில் அமைந்திருக்கும் டால்பி தியேட்டரில் ஆஸ்கர் விருது விழா நடைபெறுகிறது. இந்நிலையில், 2029-ம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருது விழா நடைபெறும் அரங்கம் புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளது.
டால்பி தியேட்டருடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நிறைவு பெற உள்ளதால், 2029-ம் ஆண்டில் 101-வது ஆஸ்கர் விருது விழா பீக்காக் தியேட்டரில்(Peacock Theater) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பீக்காக் தியேட்டர் ஹாலிவுட்டில் இருந்து சுமார் 14.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது டால்பி தியேட்டரை விட அதிக இருக்கை வசதியைக் கொண்ட அரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
