நாமக்கல்,
நாமக்கலில் நடந்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது:-
தேர்தல் காலத்தில் பறக்கும் படையினர் மேற்கொள்ளும் சோதனைகள் வணிகர்களை குறிவைத்து நடைபெறுகின்றன. உரிய ஆவணங்கள் இருந்தாலும் ரொக்கம் பறிமுதல் செய்யப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வணிகர்கள், தினசரி வியாபார நடவடிக்கைகளுக்காக ரூ.2 லட்சம் வரை ரொக்கம் எடுத்துச்செல்ல இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 31-ந் தேதி சென்னையில் தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும். அதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முற்றுகையிடப்படும். கடைசி கட்டமாக மாநிலம் முழுவதும் வணிகக்கடைகள் அடைக்கப்படும்.
கரூர் சம்பவத்தில் தவெக தலைவருக்கு எதிராக வணிகர்கள் புகார் கூறினர் என்பதை ஏற்க முடியாது. ஏனென்றால், நாங்கள் அரசியல் சார்பற்றவர்கள். உயிரிழப்பு ஏற்படும் வகையில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு அரசு அனுமதிக்கக்கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு. யார் தலைமையில் கூட்டம் நடக்கிறதோ, அங்கு நடக்கும் அசம்பாவிதத்துக்கும் அந்த கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
