லஞ்ச வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை: அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பிரவீன்குமார். நேற்று போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த இவரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

விசாரணையில் கடந்த 2017-ம் ஆண்டு பிரவீன்குமார், சப்-இன்ஸ்பெக்டராக இருந்தபோது அவரது தம்பி வருமான வரித்துறையில் பணிபுரிந்து வருவதாகவும், வருமான வரித்துறையில் சலுகை வாங்கித் தருவதாகவும் கூறி ஒரு நபரிடம் ரூ.3 லட்சம் லஞ்சமாக வாங்கியதாக தெரிகிறது.

இந்த வழக்கில் சி.பி.ஐ. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பிரவீன்குமார், அதன்பிறகு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பிரவீன்குமாருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து சி.பி.ஐ. போலீசார், இன்ஸ்பெக்டர் பிரவீன்குமாரை கைது செய்து அழைத்துச் சென்றது தெரியவந்தது. பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

Source link