உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் குகேசுடன் மோதப்போகும் வீரர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் சைப்ரஸ் நாட்டின் பெஜியா நகரில் உள்ள சொகுசு ஓட்டலில் இன்று தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் பிரக்ஞானந்தா (இந்தியா), பேபி யானா கருணா, ஹிகரு நகமுரா (இருவரும் அமெரிக்கா), அனிஷ் கிரி (நெதர்லாந்து), மத்தியாஸ் புளுபாம் (ஜெர்மனி), ஜவோகிர் சிந்தாரோவ் (உஸ்பெ கிஸ்தான்), ஆந்த்ரே இசிபென்கோ (ரஷியா), வெய்யி (சீனா) ஆகிய 8 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். அதாவது 14 சுற்று முடிவில் அதிக புள்ளிகள் எடுக்கும் வீரர் பட்டத்தை வெல்வதுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கும் தகுதி பெறுவார். தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா இதுவரை உலக சாம்பியன்ஷிப்பில் ஆடியதில்லை. அந்த பொன்னான வாய்ப்பை பெற அவருக்கு இது அருமையான சந்தர்ப்பமாகும். ஆனால் அவருக்கு உலகின் 2-ம் நிலை வீரர் நகமுரா, 3-ம் நிலை வீரர் கருணா ஆகியோர் கடும் சவாலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. முதல் நாளில் தொடக்க விழா மட் டுமே நடைபெறும். முதல்சுற்று ஆட்டங்கள் நாளை நடக்கின்றன. பிரக்ஞானந்தா முதல் சுற்றில் அனிஷ் கிரியுடன் (இரவு 7 மணி) மோதுகிறார்.
போட்டியில் முதல் 40 நகர்வுக்கு 2 மணி நேரமும், எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்களும் ஒதுக்கப்படும். அத்துடன் 41-வது காய் நகர்த்தலில் இருந்து ஒவ்வொரு நகர்வுக்கும் 30 வினாடி அதிகரிக்கப்படும். வீரர்கள் 41-வது நகர்வுக்கு முன்பாக டிராவுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரைபுள்ளியும் வழங்கப்படும். பட்டம் வெல்லும் வீரருக்கு ரூ.76 லட்சம் பரிசுத்தொகையாக கிடைக்கும்.
இதே இடத்தில் பெண்களுக்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொட ரும் நடத்தப்படுகிறது. இதில் திவ்யா தேஷ்முக், வைஷாலி (இருவரும் இந்தியா), ஜூ ஜினெர். டான் ஜோங்யி (இருவரும் சீனா). அலெக்சாண்ட்ரா கோரியச்கினா, கேத்ரினா லாக்னோ (இருவரும் ரஷியா), அன்னா முசிசுக் (உக்ரைன்), பிபிசரா அசாபயேவா (கஜகஸ்தான்) ஆகியோர் களம் இறங்குகிறார்கள். பாதுகாப்பு அச்சம் காரணமாக இந்தியாவின் கோனெரு ஹம்பி கடைசி நேரத்தில் விலகியதால் அவருக்கு பதிலாக அன்னா முசிசுக் சேர்க்கப்பட்டார். நாளை நடக்கும் முதல் சுற்றில் திவ்யா தேஷ்முக், அன்னா முசிசுக்கையும், தமிழகத்தின் வைஷாலி, பிபிசராவையும் சந்திக்கிறார்கள்.
