ஈரானில் தரைவழி தாக்குதல் இல்லாமலேயே ராணுவ நடவடிக்கையில் வெற்றி பெறுவோம்: மார்கோ ரூபியோ

பாரீஸ்

பிரான்ஸ் நாட்டின் அப்பயி டிஸ் வாக்ஸ்-டி-செர்னே நகரில் ஜி7 வெளியுறவு துறை மந்திரிகளுக்கான கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கி நடந்தது. இதில் உறுப்பு நாடுகள் கலந்து கொண்டன. இந்தியா சார்பில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர், பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பிய மற்றும் வெளிவிவகார துறைக்கான மந்திரி ஜீன்-நோயல் பேரட் மற்றும் ஜி7 நாடுகளை சேர்ந்த வெளிவிவகார துறைக்கான மந்திரிகள் பங்கேற்றனர்.

அப்போது மத்திய கிழக்கில் காணப்படும் சூழ்நிலை பற்றி மந்திரிகள் மட்டத்தில் விரிவான முறையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அவர்கள், ஹார்மூஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இணைந்து பணியாற்றும் நோக்கில், நெருங்கிய ஒருங்கிணைப்பை தொடர சம்மதம் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த கூட்டம் நேற்றும் நடந்தது.

Also Read
உ.பி.: ரூ.11,200 கோடி மதிப்பிலான முதல்கட்ட நொய்டா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
ஈரானில் தரைவழி தாக்குதல் இல்லாமலேயே ராணுவ நடவடிக்கையில் வெற்றி பெறுவோம்:  மார்கோ ரூபியோ

இந்நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மார்கோ ரூபியோ, ஈரான் அணு ஆயுதங்கள் எதனையும் வைத்திருக்காத வகையில், அந்நாட்டின் அனைத்து வித ராணுவ திறனமைப்புகளையும் அழித்து விடுவோம். அவர்களுடைய கடற்படை, விமான படை, ஏவுகணை ஏவுகலன்கள் உள்ளிட்டவற்றை தாக்கி அழித்து வருகிறோம். இவை எல்லாவற்றிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

எந்தவித தரை படையின் தாக்குதல் இல்லாமலேயே இவற்றை நாங்கள் சாதிப்போம் என்றார். மேற்காசியாவில், மோதலை முன்னிட்டு, 82-வது விமான படை பிரிவின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை குவிக்க அமெரிக்க தயாராகி வருகிறது என சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஈரானுடன் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் கூடுதலாக 10 ஆயிரம் வீரர்களை அனுப்ப அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது என போர் துறைக்கான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை தெரிவித்தது. இது 82-வது விமான படை பிரிவின் வீரர்களுடன் சேர்த்து, அனுப்பப்படும் கூடுதல் படை தொகுதியாகும். அதில் கவச வாகனங்கள், பீரங்கிகள் போன்றவையும் இருக்கும்.

இந்த சூழலில், சில மாதங்கள் அல்ல, இன்னும் சில வாரங்களிலேயே மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ரூபியோ கூறியது கவனிக்கத்தக்கது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என டிரம்ப் கூறி வருகிறார். இதற்காக ஏப்ரல் 6-ந்தேதி வரை, ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களும் ஒத்திவைக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

Source link