சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி துவங்கி விட்டார். இதனிடையில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தவெக இணையும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு எட்டப்படாத காரணத்தால் அதிமுக கூட்டணியில் விஜய் இணையவில்லை.
பலமுனை போட்டி
சட்டப்பேரவை தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு அரசியல் களத்தின் விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணியுடன் இந்த தேர்தலை எதிர்கொள்ள தயாராகியுள்ளன. மற்றொரு பக்கம் நாதக, தவெக, சசிகலா மற்றும் ராமதாஸ் கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளன. இதன் காரணமாக பல முனைகளில் இந்த தடவை போட்டிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரச்சாரத்தை துவங்கிய எடப்பாடி பழனிசாமி
இதனிடையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை முதல் ஆளாக ஒதுக்கீடு செய்துவிட்டு, பிரச்சார களத்திற்கு வந்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் சென்னையில் நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றில் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். அதன்படி அவர் பேசியுள்ளதாவது, “எல்லாரும் இறந்து போனால் அங்க போய் துக்கம் விசாரிப்பாங்க. ஆனால் அந்த கட்சிக்கு. நாட்டோட கொடுமையை பாருங்க. எதுக்காக வந்து இறந்தாங்க. ஏன் இறந்தாங்க. அந்த குடும்பத்தை இங்க வர வைச்சு அனுதாபம் சொல்றாங்களாம்.
சினிமா என்பது ஒரு கனவு மாதிரி
ஏன்னா சினிமா அப்படித்தான் இருக்கும். டெக்னிக்கலா இருக்கும். மக்கள் ஏமாற வேண்டாம். சினிமா அப்படித்தான் இருக்கும். மனசுல இருக்க கஷ்டங்களை மறப்பதற்கு சினிமா பார்க்கலாம். ரசிக்கலாம். அதோட விட்ரனும். நிஜ வாழ்க்கைக்கு சினிமா ஒத்து வருமா? நிஜமும், சினிமா வாழ்க்கையும் வேறு. தயவுசெய்து இளைஞர்களும், பெண்களும் சிந்தித்து பார்க்க வேண்டும். நிஜ வாழ்க்கை என்பது கடினம். சினிமா ஒரு கனவை போல.
இபிஎஸ் கடும் விமர்சனம்
கனவு கலைஞ்ச பிறகு கண்ணை திறந்தால், கனவு மறைஞ்சுடும். அது போல சினிமா முடிஞ்சு வெளியே வந்துட்டால், அதுவும் போயிடும். அப்படித்தான் நீங்க என்ன வேண்டும் என்பதை இளைஞர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மாணவர்களுடைய உள்ளங்களை புரிந்து நடந்து கொள்கிற கட்சி அதிமுக. இவ்வாறு தவெக தலைவர் விஜய்யை இபிஎஸ் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளது இணையத்தில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு
இதனிடையில் பெரம்பூரில் இருந்து இன்று தனது சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை துவங்குவதற்கு திட்டமிட்டு இருந்தார் விஜய். இந்நிலையில் விஜய் பிரச்சாரம் செய்வதாக கூறப்பட்ட இடம் 3000 கூடுவதற்கு உகந்த இடமில்லை என அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இடத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டு இருக்கிறது. தவெகவை வேண்டுமென்ற தேர்தல் பிரச்சாரம் செய்ய விடாமல் முடக்குவதாக விஜய் கண்டனம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து விஜய்யின் இந்த குற்றச்சாட்டை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் மறுத்துள்ளார். அந்த இடத்தில் எந்த புதிய பணிகளும் ஆரம்பிக்கப்படவில்லை. குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பை சரி செய்வதற்காக மிகக் குறுகிய பரப்பளவில் பழு பார்க்கப்பட்டது. உடனடியாக அந்த பணியும் நிறைவு செய்யப்பட்டு விட்டது. எனவே இந்த பணிகள் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுவதாக சொல்வது தவறான தகவலாகும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
