பிடிஆர் எதிராக இயக்குநர் சுந்தர்.சி: இரட்டை இலை சின்னத்தில் போட்டி  – Kumudam

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான மதுரை மத்திய தொகுதியில் பிரபல இயக்குனர் சுந்தர் சி களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதி கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியத் தொகுதியான மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி போட்டியிடுவார் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்திலேயே அவர் களம் காணவிருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டாவது தொகுதி மற்றும் அதன் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வரும் மார்ச் 30-ஆம் தேதி (திங்கள்) சென்னையில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

மதுரை மத்திய தொகுதி தற்போது திமுகவின் வசமுள்ளது; கடந்த 2021 தேர்தலில் இங்குப் போட்டியிட்ட அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற்றார். கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜோதி முத்துராமலிங்கம் சுமார் 39,000 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்த நிலையில், இந்த முறை ஒரு பிரபலமான முகத்தை நிறுத்துவதன் மூலம் தொகுதியைக் கைப்பற்ற அதிமுக கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Source link