தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், இன்று விஜய் பெரம்பூரில் பிரச்சாரம் செய்வதற்கு திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
நாதக சீமான் தீவிர பிரச்சாரம்
சட்டமன்ற தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில் வழக்கம் போல நாதக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளது. இதற்காக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமான பிரச்சாரத்தை ஈடுபட்டு வருகிறார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அதோடு செய்தியாளர்களை சந்தித்து, அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் பதிலளித்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தவெக விஜய்யின் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது சம்பந்தமாக பேசியுள்ளார்.
தவெக விஜய்க்கு ஆதரவாக குரல்
இது தொடர்பாக அவர் கூறுகையில், “பிரச்சாரத்துக்கு அனுமதி மறுக்க வேண்டிய அவசியம் இல்லை. யாராலும் மறுக்கவும் முடியாது. தேர்தல் ஆணையம் எல்லாரையும் அனுமதிச்சு தான் ஆகும். எனக்கு அதைப்பற்றி முழுசா தெரியலை. ஆனால் அனுமதிக்காமல் அப்பறம் என்ன ஜனநாயகம், மக்களாட்சி. எல்லாருக்கும் ஜனநாயகத்தில் சம உரிமை. சமபங்கு என்பது வெற்று கூச்சல் ஆகிடும் என்றார். இந்த நெருக்கடி இன்னைக்கு கிடையாது.
கடந்த 15 ஆண்டுகளாக நெருக்கடி
தம்பி விஜய் இன்னைக்கு அனுபவிக்கிறார். நான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்த நெருக்கடியை அனுபவிக்கிறேன். நான் பேசுறதுக்கு அனுமதி கேட்டால், எங்க மக்கள் நடமாட்டம் இருக்காதோ அந்த சந்துக்குள்ள கொடுத்துடுவாங்க. எங்க யாருமே இல்லையோ, அங்க பேசிட்டு போன்னு. விஜய் இன்னைக்கு தான் அனுபவிக்கிறாரு. நான் நீண்ட காலமாக இதையெல்லாம் அனுபவிச்சுட்டு வரேன். எனக்கு பழகிருச்சு என்று பதிலளித்துள்ளார்.
விஜய்யின் குற்றச்சாட்டு
இதனிடையில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு திமுக அனுமதி மறுப்பதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்தை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தான் தற்போது தேர்தல் பிரச்சாரங்களுக்கு அனுமதி கொடுத்து வருவதாக திமுக ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக அமைச்சர் மா. சுப்ரமணியன் தவெக பிரச்சார அனுமதி மறுப்புக்கும், அரசுக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர்ர் மா. சுப்ரமணியன் விளக்கம்
இது சம்பந்தமாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தவர், மீட்டிங்கிற்கு யார் அனுமதி கொடுப்பாங்கன்னு அவர் முதல்ல தெரிஞ்சுக்கனும். தேர்தல் ஆணையத்தின் விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் 48 மணிநேரத்துக்கு முன்பாக சுவேதா என்ற ஆப் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்துக்கோ, காவல் நிலையத்துக்கோ அவர்கள் செல்ல வேண்டியது இல்லை.
இந்த செயலியில் பதிவு பண்ணிட்டால் அனுமதி கிடைச்சுடும். இதுக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. அவர்தான் சொல்றாருன்னா, நம்மளும் அதை கேட்டுக்கலாமா என கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் ஆணையம் தான் எல்லாமே நிர்ணயம் செய்யும். இதற்கு அரசாங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என திட்டவட்டமாக அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
