இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ் தோனி. 44 வயதான தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தோனி இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதேநேரத்தில், தோனியின் பிட்னஸ் முன்பை போல இல்லை என்றும் அவர் ஓய்வு பெறுவதே நல்லது எனவும் முன்னாள் வீரர்கள் சிலர் கூறி வருகிறார்கள்.
நடப்பு ஐபிஎல் தொடரிலும் அனைத்து போட்டிகளிலும் தோனி விளையாடுவாரா அல்லது இம்பேக்ட் வீரராக பங்கேற்பாரா? என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ்சிங்கின் தந்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோகராஜ் சிங், தோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
யோகராஜ் சிங் கூறியதாவது:-“எம்.எஸ். தோனி இன்னும் விளையாடி கொண்டிருக்கிறார். இன்னும் 10 வருடத்திற்கு அவர் விளையாட வேண்டும். ஏனெனில் அவர் தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளார். அவர் ஒரு அற்புதமான மனிதர். ஓய்வு பற்றி பேச மற்றவர்கள் யார்? கிரிக்கெட்டை பொறுத்தவரை அவருக்கு என் சல்யூட்!” என்று கூறியுள்ளார். தனது மகனின் கிரிக்கெட் கேரியரை தோனிதான் அழித்தார் என்று கடுமையாக விமர்சித்து வந்த யோகராஜ் சிங், தற்போது தோனிக்கு ஆதரவாக பேசியிருப்பது வைரல் ஆகி வருகிறது.
