சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
இதனிடையே சென்னை தியாகராயர்நகர் (தி.நகர்) தொகுதி எம்.எல்.ஏ.வாக கருணாநிதி செயல்பட்டு வருகிறார். இவர் மறைந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ. அன்பழகனின் சகோதாரர் ஆவார்.
கருணாநிதி சென்னை தென்மேற்கு மாவட்டம் தியாகராயர்நகர் கிழக்கு பகுதி திமுக செயலாளராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், தி.நகர் தொகுதியில் போட்டியிட கருணாநிதிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தி.நகர் தொகுதியில் போட்டியிட கருணாநிதிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக தி.நகர் தொகுதி திமுக வேட்பாளராக மறைந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் மகன் ராஜா அன்பழகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் விரக்தியடைந்த கருணாநிதி தியாகராயர்நகர் கிழக்கு பகுதி திமுக செயலாளர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதி எழுதிய கடிதத்தில் கூறியதாவது:-
பொருள்: எனது பகுதி செயலாளர் பதவி ராஜினாமா தொடர்பாக.
மதிப்பிற்குரிய தலைவர் அவர்களுக்கு வணக்கம்,
தியாகராயர் நகர் கிழக்கு பகுதி செயலாளராக பல ஆண்டு காலம் கடுமையாக உழைத்துள்ளேன். அந்த உழைப்பிற்கும்,நேர்மைக்கும், கழகம் மேல் இருந்த பற்றிற்கும் தற்போது மதிப்பில்லாத காரணத்தினால் எனது கழக பகுதி செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். எனக்கு ஒத்துழைப்பளித்த கழக தலைவர் அவர்களுக்கும் பிற
அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
