போர் சூழல் காரணமாக 2 ரூபாய் மாணியம் வழங்கப்படுவதால் தமிழக மின்வாரியத்தின் பில்லிங் மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மானியம் பெறுவதற்கான தகுதிகள் மற்றும் ஆய்வு முறைகள்
தமிழக மின் வாரியத்தின் நிதிப் பிரிவு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, இந்த மானியத் திட்டம் தேநீர் விடுதிகள், உணவகங்கள், விடுதிகள், பேக்கரிகள் மற்றும் ‘கிளவுட் கிச்சன்’ எனப்படும் நவீன சமையல் கூடங்களுக்குப் பொருந்தும். உயர் அழுத்த மின் இணைப்பு (HT) கொண்ட வணிக நிறுவனங்களில், அந்த மின் சுமை முழுமையாக உணவு தயாரிப்பு சார்ந்த பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக அந்தந்தப் பகுதி கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் உதவிச் செயற்பொறியாளர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்த மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் (IT Parks) போன்ற வணிகம் சாரா பிரிவுகளில் உள்ள கேன்டீன்கள் மற்றும் உணவகங்கள் இந்த மானியத்தைப் பெற வேண்டுமானால், அவற்றிற்குத் தனியான மின் கணக்கீட்டு மீட்டர் (Separate Meter) பராமரிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.
மின் கட்டணக் கணக்கீடு மற்றும் மென்பொருள் மாற்றங்கள்
தாழ் அழுத்த மின் இணைப்பு (LT) கொண்ட நுகர்வோரைப் பொறுத்தவரை, அவர்களின் வணிகப் பயன்பாட்டைத் தேநீர் விடுதி, சிறிய உணவகம், பெரிய ஹோட்டல், இனிப்பு மற்றும் பேக்கரி கடைகள் எனப் பல்வேறு உட்பிரிவுகளாகப் பிரிக்கும் வகையில் மின் வாரியத்தின் பில்லிங் மென்பொருளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மின் கணக்கீடு எடுக்கும் பணியாளர்கள், மீட்டரை ஆய்வு செய்யும் போதே அந்தந்தக் கடை எந்த வகையைச் சார்ந்தது என்பதைச் சரியாகப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது உயர் அழுத்தப் பிரிவினர் ஒரு யூனிட்டிற்கு 9.40 ரூபாயும், தாழ் அழுத்தப் பிரிவினர் தங்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப 6.45 முதல் 10.45 ரூபாய் வரையிலும் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
அவசர கால நடவடிக்கை மற்றும் கணக்கீட்டு முறை
கடந்த மார்ச் 14-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க மின்சார அடுப்புகளுக்கு மாறும் நுகர்வோருக்கு, அவர்கள் கூடுதலாகப் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மட்டுமே இந்த மானியம் பொருந்தும். இந்தத் தொகையைத் தமிழக அரசே மின் வாரியத்திற்கு நேரடியாகச் செலுத்திவிடும். ஒரு நிறுவனத்தின் தற்போதைய மின் பயன்பாட்டை, கடந்த ஆண்டின் இதே மாதத்தின் பயன்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அதில் ஏற்படும் கூடுதல் மின் நுகர்வுக்கு மட்டுமே இந்த 2 ரூபாய் மானியம் கணக்கிடப்படும். இது ஒரு அவசர கால நடவடிக்கை என்பதால், இதற்கான ஒப்புதலைத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் (TNERC) பின்னர் பெற்றுக் கொள்ள மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. அரசின் இந்தத் திட்டம் எரிவாயு தட்டுப்பாட்டினால் தவிக்கும் சிறு மற்றும் குறு உணவக உரிமையாளர்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
