அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட துறையூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சரோஜா மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சி தலைமைக்கு கண்டனத்தை பதிவு செய்து தேவேந்திர குல வேளாளர் நல சங்கம் அதிரடியான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது.
தேவேந்திர குல வேளாளர் செல்வாக்கு
துறையூர் தனித் தொகுதியாக இருக்கும் நிலையில், பட்டியல் சமூகத்தின் கீழ் தேவேந்திர குல வேளாளர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது அதிமுக தரப்பில் தொடர் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் கட்சி தலைமை கண்டுகொள்ளவில்லை என்கின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவருக்கு எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என்று அந்த சமூகத்தை சேர்ந்த சங்கங்கள் காய் நகர்த்தின.
தலைநகரில் தாராளம் காட்டும் எடப்பாடி…இது தான் வியூகமா?
ஆனால் வெறும் 1,000 வாக்குகள் கூட இல்லாத மாற்று சமூகத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது உட்கட்சி பூசலை உண்டாக்கியுள்ளது. வேட்பாளர் பட்டியல் வெளியானதை அடுத்து, போஸ்டர்கள் அடித்து தொகுதியின் பல்வேறு பகுதியிலும் ஒட்டி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனை துறையூர் வாழ் தேவேந்திர குல வேளாளர் நல சங்கத்தினர் செய்துள்ளனர். இங்கு 60,000 பேருக்கும் மேல் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் தான் வெற்றி வாய்ப்பு கிட்டும் என்கின்றனர்.
நாங்குநேரி மாதிரி துறையூரில் தேர்தல் புறக்கணிப்பு
இந்த சூழலில் அதிமுக தலைமையை கண்டிக்கும் வகையில் பதிவிட்டிள்ளனர். இந்த முடிவை எடப்பாடி பழனிசாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இல்லையெனில் நாங்குநேரி போல துறையூரில் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என்று துறையூர் வாழ் தேவேந்திர குல வேளாளர் நல சங்கத்தினர் சுட்டிக் காட்டியுள்ளார். இதன் காரணமாக துறையூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றிக்கான வேலைகளில் ஈடுபடுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அவர் எளிதில் வென்று விடுவார் என்ற பேச்சு அடிபடுகிறது. தொகுதி மறுவரையறை அடிப்படையில் கடந்த 2008ஆம் ஆண்டு உருவான துறையூர் தனித் தொகுதியானது, இதுவரை மூன்று சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்துள்ளது. 2011ல் அதிமுக, 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் திமுகவின் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏவாக எஸ்.ஸ்டாலின் குமார் இருக்கிறார்.
அதிமுக வேட்பாளரை மாற்ற வேண்டும்
கடந்த தேர்தலில் 22,071 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வி அடைந்தது. தொடர்ந்து 2 முறை தோற்றதில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றும், இம்முறை வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் உள்ளூர் கட்சியினர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூக அமைப்புகள் முடிவு செய்திருந்தன. இந்நிலையில் வேட்பாளர் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள அதிருப்தியை அதிமுக தலைமை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்திறுந்து தான் பார்க்க வேண்டும்.
