2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. அதில் கட்சி தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் போட்டி
இதையடுத்து வேட்பாளர் பட்டியலை தவெக தலைவர் விஜய் அறிவித்தார். அதில், முதல் வேட்பாளராக தன்னுடைய பெயரை குறிப்பிட்டார். அதன்படி, பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் போட்டியிடும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் பெரிதும் கவனம் ஈர்க்கும் வகையில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்கின்றனர். தற்போதைய சூழலில் இவருக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதால் இரண்டிலும் வெற்றி பெற அதிக வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது.
அமைதியாக ஆட்டத்தை தொடங்கிய விஜய்… அதிரும் அரசியல் களம்!
2026 தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டி
பெரம்பூர் தொகுதியை பொறுத்தவரை 1952ஆம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்து வருகிறது. இதுவரை சோஷலிஸ்ட் கட்சி 1, சுயேட்சை 1, காங்கிரஸ் 1, திமுக 9, அதிமுக 2, சிபிஎம் 3 முறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் திமுகவின் ஆர்.டி.சேகர் 54,976 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை திமுக சார்பில் மீண்டும் ஆர்.டி.சேகர் போட்டியிடுகிறார். 3வது முறை எம்.எல்.ஏவாகும் வாய்ப்பை விஜய் தட்டி பறிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுகவின் இனிகோ இருதயராஜ்
இந்த தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடுகிறது. இவர்கள் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றி தமிழன் களம் காண்கிறார். திருச்சி கிழக்கு தொகுதியை பொறுத்தவரை 2011 முதல் சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்து வருகிறது. இதுவரை அதிமுக 2 முறை, திமுக 1 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2021 தேர்தலில் திமுகவின் இனிகோ இருதயராஜ் 53,797 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.
விஜய்க்கான வெற்றி வாய்ப்பு
சிறுபான்மையினர் வாக்குகள் அதிகமுள்ள தொகுதி என்பதால் மீண்டும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் கே.ராஜசேகரனுக்கு சீட் கிடைத்திருக்கிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடும் சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் ஜோசப் விஜய் களம் காண்கிறார். இந்த இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.
தவெக தலைவர் விஜய் சென்னையில் பிரச்சாரம்
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பிரச்சாரத்திற்கு தவெக சார்பில் அனுமதி கேட்கும் போது மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னையில் பலகட்டப் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டிருந்தார். இதில் சிலர் முட்டுக்கட்டை போடும் வகையில் செயல்படுவதாக தவெக தரப்பில் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் நேரடியாக மனு அளித்தார். இதையடுத்து பெரம்பூர், கொடுங்கையூர், வில்லிவாக்கம், அண்ணா நகரிலும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதி பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதையொட்டி காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
